30 ஆண்டுக்கு பின் பயங்கர வேகம் அனுமதியின்றி கட்டிய கட்டடத்திற்கு 'சீல்'
மதுரவாயல்:மதுரவாயலில் முறையான அனுமதியின்றி, 1993ல் கட்டிய மூன்று மாடி கட்டடத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள், 'சீல்' வைத்தனர்.
வளசரவாக்கம் மண்டலம், 144வது வார்டு, மதுரவாயல் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மூன்று மாடி கட்டடம் ஒன்று உள்ளது. இதன் கீழ் தளத்தில் ஹோட்டலும், மேல் தளத்தில் முடி மாற்று சிகிச்சை அளிக்கும் நிலையமும் இயங்கி வந்தது.
இந்த கட்டடம் முறையான அனுமதி இன்றி கட்டப்பட்டுள்ளதாகவும், விதிகளை மீறி விரிவாக்கம் செய்து மின்துாக்கி அமைத்துள்ளதாகவும், தனிநபர் ஒருவர், 2022ல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
விசாரித்த நீதிமன்றம், அந்தக் கட்டடத்தை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டது. இதையடுத்து மாநகராட்சி சார்பில், பலமுறை 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது.
இதையடுத்து கட்டட உரிமையாளர், கட்டடம் 'சீல்' வைப்பு நடவடிக்கை நிறுத்த கோரி, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையிடம் முறையிட்டார். அத்துறையும் மூன்று மாதங்கள் அவகாசம் வழங்கி, சீல் வைப்பு நடவடிக்கை தள்ளி வைக்க, மாநகராட்சியிடம் அறிவுறுத்தியது.
அந்த காலக்கெடு முடிவடைந்த நிலையில், வளசரவாக்கம் மண்டலம் செயற்பொறியாளர் விஜயபாஸ்கர் மற்றும் உதவி செயற்பொறியாளர் சாந்தி தலைமையிலான மாநகராட்சி அதிகாரிகள் நேற்று, அக்கட்டடத்திற்கு 'சீல்' வைத்தனர்.
அந்த கட்டடத்தில் இருந்த ஹோட்டலும், முடி மாற்று சிகிச்சை அளிக்கும் நிலையமும், சில நாட்களுக்கு முன் காலி செய்துவிட்டன.