நன்னீர் ஏரியில் கழிவு நீர் தேக்கமா; கோவை மாநகராட்சி முடிவால் அதிர்ச்சி!

1

கோவை: சின்னவேடம்பட்டி ஏரியில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை கொண்டு வந்து நிரப்ப கோவை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.



கோவை வடக்கு பகுதியின் பிரதான நீராதாரம் சின்னவேடம்பட்டி ஏரி சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரியானது சங்கனூர் பள்ளத்தில் ஏற்படும் பெருவெள்ளம் காரணமாக நகரில் பெரிய அளவில் வெள்ள பாதிப்புகளை தவிர்க்க மாங்கரை தடாகம் நீர்பிடிப்பு பகுதிகள் மூலம் கணுவாய் தடுப்பணை வழியே சுமார் 8 கிலோ மீட்டர் ராஜவாய்க்கால் வழியே வந்து ஏரி நிறையும் படி சமகாலத்தில் 1980களில் அமைக்கப்பட்டுள்ள நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரியாகும்.

இந்த ஏரி 1992க்கு பிறகு மழை குறைவு மற்றும் நீர்வழிப்பாதைகள் தூர்ந்து போன காரணங்களால் படிப்படியாக தண்ணீர் இன்றி கடந்த 30 ஆண்டுகளாக தண்ணீர் வரத்து இல்லாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த 8 ஆண்டுகளாக இந்த ஏரிக்காக ஒரு அமைப்பை ஏற்படுத்தி அரசு அனுமதியுடன் சீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு அமைப்பு மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி கடந்த 2023ம் ஆண்டு நமக்கு நாமே திட்டம் அடிப்படையில் ஏரி மற்றும் ராஜவாய்க்கால் சீரமைக்கப்பட்டு சுமார் 30 வருடங்களுக்கு பிறகு ஏரியில் சுமார் 40 சதவீதம் அளவிற்கு தண்ணீர் கிடைத்தது.

மாங்கரை தடாகம் பள்ளத்தாக்கு பகுதி நீர்வழிப்பாதைகளை சீரமைக்க மாவட்ட ஆட்சியர் மூலம் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. சமீப காலங்களாக காலநிலை மாற்றம் காரணமாக மழை வெள்ள பாதிப்புகள் பெருநகரங்களை அதிகம் பாதித்து வருகின்றன. இந்த நிலையில் கோவையில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகளில் கழிவுநீர் தேங்கியுள்ளது. அப்படியான நிலையில் கோவையின் வடக்கு பகுதியில் தண்ணீர் தேக்க வாய்ப்புள்ள ஒரே நீர்நிலையாக சின்னவேடம்பட்டி ஏரி மட்டுமே உள்ளது. அவிநாசி அத்திக்கடவு திட்டம் இரண்டில் இணைக்கப்பட்டுள்ள இந்த ஏரியானது, சிறப்பு திட்டம் மூலமாக பவானியில் இருந்து நீர் வேண்டி கோரிக்கைகளும் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகிறது.

தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியாக சின்னவேடம்பட்டி ஏரிக்கு பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வர ஏற்கனவே உறுதி அளித்துள்ளார். இப்படியான நிலையில் தற்போது மாநகராட்சி மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் சின்னவேடம்பட்டி ஏரியில் சுத்திகரிக்கப்பட்ட நீர் விட அறிவிப்பு நேற்று வெளியாகியுள்ளது. அத்திக்கடவு கெளசிகா நதி மேம்பாட்டு சங்கம் மூலமாக கோவை மாவட்ட ஆட்சியர் அவர்களை இன்று சந்தித்த நிலையில் அவர் டெர்சியரி பிளான்ட் அமைத்து கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து ஏரியில் விட்டு குடிநீராக பயன்படுத்தும் அளவில் திட்டம் செயல்படுத்த சாத்தியங்கள் ஆராயப்படலாம். இது குறித்து மாநகராட்சி மூலம் ஏற்பாடு செய்திடலாம் என நம்பிக்கை தெரிவித்தார்.

ஏற்கனவே கோவை சுற்றிலும் உள்ள பெரும்பாலான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பாட்டில் பராமரிப்பில் கேள்விகள் உள்ள நிலையில் நன்னீர் தேக்க வாய்ப்புள்ள சின்னவேடம்பட்டி ஏரியில் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து நீர்தேக்குவது மற்றும் அப்படி தேக்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட நீரின் தன்மை மண்ணில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பல கேள்விகள் உள்ளன.

Advertisement