புதுச்சேரியில் 12 முதல் ஹெல்மெட் கட்டாயம்

புதுச்சேரி : புதுச்சேரியில் வரும் 12ம் தேதி முதல், இரு சக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் உயிரிழப்பதை தடுக்க கட்டாயம் ஹெல்மெட் அணிவதை உறுதி செய்ய உச்சநீதிமன்றம் மற்றும் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் மாநிலங்களுக்கு அறிவுறுத்தி உள்ளன.

அதன்பேரில், புதுச்சேரியில் வரும் 12ம் தேதி முதல், இரு சக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என புதுச்சேரி போலீஸ் உத்தரவிட்டுள்ளது.

ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து போக்குவரத்து போலீசார் கடந்த 2 மாதங்களாக பள்ளி மற்றும் கல்லுாரிகளிலும், முக்கிய சாலை சந்திப்புகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ஹெல்மெட் அணிந்து பைக் ஓட்டுபவர்களுக்கு பூக்கள், இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும், டூ வீலரில் பணிக்கு வரும் அரசு ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்த்திருத்த துறை உத்தரவிட்டுள்ளது.

வரும் 12ம் தேதி முதல், புதுச்சேரியில் ஹெல்மெட் அணியாமல் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு, புதிய மோட்டார் வாகன சட்டப்படி, ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்.

Advertisement