ஆந்திராவில் ரூ.1.85 லட்சம் கோடியில் நாட்டின் முதல் பசுமை ஹைட்ரஜன் மையம்

விசாகப்பட்டினம்: தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தின் ஒரு பகுதியாக, ஆந்திராவில் 1.85 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் அமைய உள்ள பசுமை ஹைட்ரஜன் மையத்துக்கு, பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

''வரும் 2030க்குள், நாட்டில் 50 லட்சம் டன் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி செய்யப்படும்,'' என, அவர் குறிப்பிட்டார்.

ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம், ஜனசேனா, பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.

இங்கு, விசாகப்பட்டினம் அருகே உள்ள படிமடகாவில், 1.85 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி மையத்துக்கான அடிக்கல் உட்பட, 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பல திட்டங்களை பிரதமர் மோடி நேற்று துவக்கி வைத்தார்.

முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஜனசேனா தலைவரும், துணை முதல்வருமான பவன் கல்யாண் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

முன்னதாக, விசாகப்பட்டினம் வந்த பிரதமர் மோடிக்கு, சாலை பேரணி வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது:

காற்று மாசு ஏற்படுத்தாத பசுமை எரிசக்தி உற்பத்திக்கு நாம் முக்கியத்துவம் அளித்து வருகிறோம். அந்த வகையில், தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கம் 2023ல் துவக்கப்பட்டது.

இதன்படி, நாட்டின் இரண்டு இடங்களில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி மையங்கள் அமைய உள்ளன. அந்த வரிசையில், விசாகப்பட்டினம் அருகே, 1.85 லட்சம் கோடி ரூபாயில் பசுமை ஹைட்ரஜன் மையம் அமைக்கப்பட உள்ளது.

வரும் 2030ம் ஆண்டுக்குள், நம் நாட்டில் 50 லட்சம் டன் பசுமை ஹைட்ரஜன் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வரும் 2047ம் ஆண்டுக்குள், ஆந்திராவின் பொருளாதாரத்தை 215 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தும், ஸ்வர்ண ஆந்திர பிரதேசம் என்ற இயக்கத்துக்கு, இந்த பசுமை ஹைட்ரஜன் மையம் வலு சேர்க்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆந்திராவின் கிருஷ்ணபட்டணத்தில், 1,518 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 2,500 ஏக்கர் நிலத்தில் அமைய உள்ள தொழில் மையம், நாக்கபள்ளியில் 1,877 கோடி ரூபாயில் அமைய உள்ள மருந்து பூங்கா உள்ளிட்டவற்றுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

Advertisement