ஷேக் ஹசீனாவின் விசா; மத்திய அரசு நீட்டிப்பு

புதுடில்லி : வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தும்படி அந்நாட்டு அரசு கோரிக்கை விடுத்த நிலையில், அவரது விசாவை மத்திய அரசு நீட்டித்துள்ளது.


நம் அண்டை நாடான வங்கதேசத்தில், அரசுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, அவாமி லீக் கட்சி தலைவர் ஷேக் ஹசீனா, 77, பிரதமர் பதவியை கடந்தாண்டு ஆக., 5ல் ராஜினாமா செய்து நம் நாட்டுக்கு தப்பி வந்தார்.

அவரது இருப்பிடம் குறித்த தகவல் மிகவும் ரகசியமாக உள்ளது.



வங்கதேசத்தில் இடைக்கால அரசு பதவியேற்றது. டாக்காவை தளமாகக் கொண்ட சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம், ஷேக் ஹசீனா மற்றும் அவரது கட்சியின் முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக, பல்வேறு குற்ற வழக்குகளில் கைது வாரன்டுகளை பிறப்பித்துள்ளது.



நீதித் துறை நடவடிக்கைக்காக, ஷேக் ஹசீனாவை வங்கதேசத்துக்கு நாடு கடத்தும்படி, மத்திய அரசுக்கு அந்நாட்டின் இடைக்கால அரசு கடந்த மாதம் கடிதம் எழுதியது. இதில், மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என தெரிகிறது.



இதற்கிடையே, ஷேக் ஹசீனா உட்பட 96 பேரின் பாஸ்போர்ட்டுகளை ரத்து செய்ததாக, வங்கதேச இடைக்கால அரசு நேற்று முன்தினம் தெரிவித்தது.



இந்நிலையில், ஷேக் ஹசீனாவின் விசாவை நீட்டித்து மத்திய அரசு நேற்று உத்தரவிட்டது.



அவரை நாடு கடத்த வேண்டும் என்ற கோரிக்கை வங்கதேசத்தில் வலுக்கும் நிலையில், விசாவை மத்திய அரசு நீட்டித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement