கருணாநிதி ஆணையை செயல்படுத்த மறுக்கும் திமுக அரசு: மருத்துவர்கள் கண்டனம்
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அறிவித்த மருத்துவர்களுக்கு ஊதிய பட்டை வழங்கும் 354 அரசாணையை நிறைவேற்றாமல் அவர் வழிவந்த திமுக அரசு மறுப்பது கண்டனத்திற்குரியது என மருத்துவர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். மகன், பேரன் என திமுக வழி வந்த கருணாநிதியின் ஆணையை நிறைவேற்ற தவறினால் வேறு யார் நிறைவேற்ற முடியும் என்றும் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இது தொடர்பாக அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் டாக்டர் எஸ். பெருமாள் பிள்ளை, வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு (LCC) இந்தியாவின் மருத்துவத் தலைநகராக தமிழகம் திகழ்கிறது என கவர்னர் உரையில் தெரிவித்து விட்டு, அரசு மருத்துவர்களின் வேதனைகளுக்கு தீர்வு தரப்படாதது வருத்தமளிக்கிறது.
திமுக ஆட்சி அமைந்தது முதல் ஏமாற்றத்துடனும், மிகுந்த வேதனையுடனும் இருக்கும் அரசு மருத்துவர்களுக்கு, பொங்கல் பரிசாக ஊதியக் கோரிக்கையை நிறைவேற்றும் அறிவிப்பை வெளியிட தமிழக முதல்வருக்கு வேண்டுகோள்:
1) முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான்... என நம் முதல்வர் ஆட்சி பொறுப்பேற்ற போது, தங்களின் கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்படும் என அரசு மருத்துவர்கள் அனைவரும் மிகுந்த நம்பிக்கையோடு எதிர்பார்த்தோம். ஆனால் திமுக ஆட்சி அமைந்து மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகும் முதல்வர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லையே என்ற ஏமாற்றமும், வருத்தமும் இங்கு ஒவ்வொரு மருத்துவரிடத்தும் அதிகமாகவே உள்ளது.
2) அன்று முதல்வர் ஸ்டாலின் எதிர்கட்சி தலைவராக இருந்த போது, மருத்துவர்களை நேரில் சந்தித்து கையை பிடித்து சத்தியம் செய்தார். ஆனால் இன்று முதல்வராக, கோரிக்கையை நிறைவேற்றும் இடத்தில் இருக்கும் நிலையில், முதல்வரை சந்திக்கவே வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது தான் வருத்தமளிக்கிறது.
கொரோனாவால் பாதிப்பு
3) கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த போது, உயிரை பணயம் வைத்து பணியாற்றிய அரசு மருத்துவர்களை முதல்வரால் என்றுமே மறக்க முடியாது. ஆனால் கொரோனாவால் உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசு 10 பைசா கூட நிவாரணம் தரவில்லை.
4) இந்தியாவின் மருத்துவத் தலைநகராக தமிழகம் திகழ்கிறது என சட்டசபையில் ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைப்போல வளர்ந்த நாடுகளுக்கு இணையாக தமிழக சுகாதாரத் துறை உள்ளது என தெரிவிக்கின்றனர். ஆனால் அதற்கு காரணமாக உள்ள
அரசு மருத்துவர்களுக்கு நாட்டிலேயே குறைவான ஊதியத்தை தந்து அவமானப்படுத்தி வருவது தான் வருத்தமளிக்கிறது.
தை பிறந்தால் வழி பிறக்குமா ?
5) கவர்னர் உரையில் அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையை நிறைவேற்றும் அறிவிப்பை வெளியிடாதது ஒட்டுமொத்த மருத்துவர்களுக்கும் மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.
6) கலைஞரின் நூற்றாண்டு விழா ஓராண்டு கொண்டாடப்படும் என முதல்வர் அறிவித்த போது, கிடப்பில் போடப்பட்டுள்ள கலைஞரின் அரசாணைக்கு உயிர் கொடுப்பார்கள் என மருத்துவர்கள் அனைவருமே ஏக்கத்துடன் எதிர்பார்த்தோம். ஆனால் மு.க.ஸ்டாலின் ஆட்சியில்
இன்று வரை கலைஞரின் ஆணைக்கு (GO. 354) இங்கு தடை போடப்பட்டுள்ளது என்பது தான் உண்மை.
7) பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற பண்டிகை நாட்கள், அரசு விடுமுறை நாட்கள் உள்பட வருடம் முழுவதும் அரசு மருத்துவமனைகள் இயங்கிட, மருத்துவர்கள் தங்கள் பங்களிப்பை தருகிறோம். ஆனால் அரசின் பார்வை மட்டும் மருத்துவர்கள் மீது விழவில்லை என்பது வருத்தமளிக்கிறது.
8) இருப்பினும் ' தை பிறந்தால் வழி பிறக்கும்' என்பார்கள். திமுக ஆட்சி அமைந்த பிறகு 4 வது தடவையாக தை பிறக்க இருக்கிறது. இப்போதாவது எங்களுக்கு வழி பிறக்குமா என்ற ஏக்கத்துடன் ஒவ்வொரு மருத்துவரும் உள்ளோம்.
எனவே தமிழக முதல்வர் , பொங்கல் பரிசாக அரசு மருத்துவர்களுக்கு
அரசாணை 354 ன் படி 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கை வழங்க வேண்டுகிறோம்.
மேலும் கொரோனா பேரிடரில் பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தன் மனைவிக்கு அரசு வேலைக்கான ஆணையை முதல்வர் அவர்கள் தன் கைகளால் வழங்கிட வேண்டுகிறோம். இவ்வாறு டாக்டர் பெருமாள் பிள்ளை கூறியுள்ளார்.