பும்ரா 'நம்பர்-1': ஐ.சி.சி., தரவரிசையில்

துபாய்: ஐ.சி.சி., டெஸ்ட் பவுலர் தரவரிசையில் இந்தியாவின் பும்ரா 'நம்பர்-1' இடத்தில் நீடிக்கிறார்.

டெஸ்ட் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. பவுலர் தரவரிசையில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, 908 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டார். ஆஸ்திரேலியாவில் நடந்த 'பார்டர்-கவாஸ்கர்' டிராபியில் 'வேகத்தில்' மிரட்டிய பும்ரா, 32 விக்கெட் சாய்த்து தொடர் நாயகன் விருதை கைப்பற்றினார்.

இந்திய சுழற்பந்துவீச்சு 'ஆல்-ரவுண்டர்' ரவிந்திர ஜடேஜா, ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஸ்காட் போலண்ட் தலா 745 புள்ளிகளுடன் 9வது இடத்தை பகிர்ந்து கொண்டனர். ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் (841), தென் ஆப்ரிக்க வேகப்பந்துவீச்சார் ரபாடா (837) முறையே 2, 3வது இடத்துக்கு முன்னேறினர். மற்றொரு ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஹேசல்வுட் (835) 4வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

பேட்டர் தரவரிசையில் இங்கிலாந்தின் ஜோ ரூட் (895), ஹாரி புரூக் (876), நியூசிலாந்தின் வில்லியம்சன் (867), இந்தியாவின் ஜெய்ஸ்வால் (847) 'டாப்-4' வரிசையில் நீடிக்கின்றனர். சிட்னி டெஸ்டில் அரைசதம் விளாசிய இந்திய விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட் (739), 12வது இடத்தில் இருந்து 9வது இடத்துக்கு முன்னேறினார்.
'ஆல்-ரவுண்டர்' தரவரிசையில் இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா (400) முதலிடத்தில் தொடர்கிறார். தென் ஆப்ரிக்காவின் மார்கோ யான்சென் (294) 2வது இடத்துக்கு முன்னேறினார்.

Advertisement