காலிறுதிக்கு முன்னேறுமா தமிழகம்
வதோதரா: விஜய் ஹசாரே காலிறுதி 'பிளே ஆப்' போட்டியில் தமிழகம், ராஜஸ்தான் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் விஜய் ஹசாரே டிராபி ('லிஸ்ட் ஏ') 32வது சீசன் நடக்கிறது. 38 அணிகள், 5 பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடித்த 5 அணிகள், 2வது இடம் பிடித்த 5 அணிகளில், 'டாப்' அணி நேரடியாக காலிறுதிக்கு முன்னேறின. அடுத்த 4 இடம் பெற்ற அணிகள் காலிறுதி 'பிளே ஆப்' போட்டியில் மோதுகின்றன.
வதோதராவில் இன்று நடக்கும் போட்டியில் 'டி' பிரிவில் இரண்டாவது இடம் பிடித்த தமிழகம், 'பி' பிரிவில் இரண்டாவது இடம் பெற்ற ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. தமிழக அணிக்கு பேட்டிங்கில் அதிக ரன் எடுத்த ஜெகதீசன் (238 ரன்), பாபா இந்திரஜித் (187), முகமது அலி (170), துவக்க வீரர் துஷார் ரஹேஜா (152) கைகொடுக்கின்றனர்.
பந்து வீச்சில் இதுவரை 13 விக்கெட் சாய்த்த 'சுழல்' வருண் சக்ரவர்த்தி அணியில் இருப்பது பெரும் பலம். தவிர அச்யுத் (7), விஜய் சங்கர் (6), சந்தீப் வாரியரும் (6) கைகொடுக்க முயற்சிக்கலாம். ராஜஸ்தான் அணிக்கு கார்த்திக் சர்மா (348), லாம்ரர் (346) பேட்டிங்கில் மிரட்டுகின்றனர். பவுலிங்கில் அனிகீத் (12), அஜய் சிங் (8) உதவலாம்.