ரஞ்சி தொடரில் ரோகித், கோலி * ரவி சாஸ்திரி விருப்பம்
புதுடில்லி: ''டெஸ்ட் அணியில் நீடிக்க விரும்பினால் ரோகித், கோலி என இருவரும் ரஞ்சி கோப்பை தொடரில் பங்கேற்க வேண்டும்,'' என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 'பார்டர்-கவாஸ்கர்' டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா ( 5 இன்னிங்ஸ், 31 ரன்), கோலி (8 இன்னிங்ஸ், 184) என 'சீனியர்' இருவரும் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தினர். இதில் கோலி 2012, ரோகித் 2016க்குப் பின் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்கவில்லை.
இதுகுறித்து இந்திய அணி முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியது:
ரோகித், கோலி என இருவரும் உள்ளூர் போட்டிகளில் (ரஞ்சி கோப்பை) பங்கேற்க வேண்டும். இதனால் இழந்த 'பார்மை' மீட்கலாம். ஏனெனில் டெஸ்டில் நிதானமாக செயல்பட வேண்டும். இதற்கு உள்ளூர் போட்டிகள் பயிற்சியாக அமையும்.
தற்போதுள்ள இளம் தலைமுறை வீரர்களுடன் போட்டியிடும் போது, மீண்டும் நன்றாக விளையாடலாம். தவிர சிறப்பாக விளையாட வேண்டும் என்ற ஆர்வம் இருக்க வேண்டும். ஒருவருக்கு 36 (கோலி), மற்றொருவருக்கு 37 வயதான (ரோகித்) நிலையில், கிரிக்கெட்டில் ஆர்வமாக உள்ளனரா என்பது அவர்களுக்குத் தான் தெரியும். ஒருவேளை போதும் என்று நினைத்தால், அவர்களே விலகி விடுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.