சென்னை போலீஸ் கமிஷனர் மீது நடவடிக்கையா: ஐகோர்ட் உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு
புதுடில்லி: சென்னை போலீஸ் கமிஷனருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற சென்னை ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பான வழக்கை கடந்த சில நாட்களுக்கு முன் விசாரித்த சென்னை ஐகோர்ட், வழக்கை விசாரிக்க 3 பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்தது.
மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். எப்.ஐ.ஆர்., வெளியிட்ட விவகாரத்தில் போலீஸ் கமிஷனர் மீது அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.
இந்நிலையில், சென்னை போலீஸ் கமிஷனருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உத்தரவிற்கு எதிராக மட்டும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து இருந்தது.
இழப்பீடு மற்றும் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படவில்லை.