விழுப்புரம் ரயில்வே போலீசார் சோதனை: 3 கிலோ கஞ்சா சிக்கியது
விழுப்புரம்: விழுப்புரத்தில் ரயிலில் கடத்திய 3 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் சோதனையின் போது கைப்பற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
விழுப்புரம் ரயில்வே சப்-இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில் போலீசார் கிருஷ்ணராஜ், திவாகர் ஆகியோர் நேற்று காலை 10.00 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையத்தில் சோதனை செய்தனர்.
அப்போது, பிளாட்பாரம் 5ல் வந்த வண்டி எண் 17653 எண்ணுள்ள காச்சிகுடா - புதுச்சேரி சென்ற ரயிலை, ரயில்வே போலீசார் சோதனையிட்டனர்.
இந்த வண்டியில் உள்ள கடைசி பொது பெட்டியில், நீல நிறத்தில் கேட்பாரற்று இருந்த சோல்டர் பேக்கை சோதனை செய்தனர்.
அதில், உள்ள 3 பொட்டலங்களை பிரித்து பார்த்த போது, அதில் கஞ்சா இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
பின், 3 கிலோ எடையுள்ள கஞ்சாவை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்து, விழுப்புரம் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். நுண்ணறிவு பிரிவு போலீசார், வழக்குப் பதிந்து கஞ்சா பொட்டலங்களை ரயிலில் கடத்தி சென்ற நபர் குறித்தும், ரயில் நிலையத்தில் அவர் பேக்கோடு ஏறிய சிசிடிவி கேமரா பதிவுகள் குறித்தும் விசாரணை செய்து வருகின்றனர்.