ஐ.எஸ்.எல்., கால்பந்து: சென்னை அணி 'டிரா'
சென்னை: சென்னை, ஒடிசா அணிகள் மோதிய ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டி 2-2 என 'டிரா' ஆனது.
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 11வது சீசன் நடக்கிறது. சென்னையில் நடந்த லீக் போட்டியில் ஒடிசா, சென்னை அணிகள் மோதின. முதல் பாதி முடிவு கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது. இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட சென்னை அணிக்கு 48வது நிமிடத்தில் வில்மர் ஜோர்டான் ஒரு கோல் அடித்தார். அபாரமாக ஆடிய இவர், 53வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடித்து கைகொடுத்தார். தொடர்ந்து போராடிய ஒடிசா அணிக்கு 80வது நிமிடத்தில் டோரி ஒரு கோல் அடித்து ஆறுதல் தந்தார். 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் (90+7வது நிமிடம்) சென்னை அணி வீரர் முகமது நவாஸ், 'சேம்சைடு' கோல் அடித்து ஏமாற்றினார்.
ஆட்டநேர முடிவில் போட்டி 2-2 என 'டிரா' ஆனது. இதுவரை விளையாடிய 15 போட்டியில், 4 வெற்றி, 4 'டிரா', 7 தோல்வி என 16 புள்ளிகளுடன் சென்னை அணி 10வது இடத்தில் உள்ளது. ஒடிசா அணி 21 புள்ளிகளுடன் (5 வெற்றி, 6 'டிரா', 4 தோல்வி) 7வது இடத்தில் நீடிக்கிறது.