'தினமலர்-பட்டம்' மெகா வினாடி-வினா போட்டி; அரையிறுதிக்கு முன்னேறி அசத்திய மாணவர்கள்
கோவை;
'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில் நடந்த 'பதில் சொல்; பரிசை வெல்' வினாடி-வினா போட்டியில் மாணவ, மாணவியர் உடனுக்குடன் பதிலளித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.
இந்தாண்டுக்கான 'வினாடி-வினா விருது, 2024-25' போட்டி, 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில் கடந்தாண்டு அக்., 8ம் தேதி துவங்கியது. இவர்களுடன் எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனமும் கரம் கோர்த்துள்ளது.
'கோ-ஸ்பான்சர்' ஆக சத்யா ஏஜென்சிஸ் உள்ளது. கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து முன்பதிவு செய்த, 150க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இப்போட்டி நடத்தப்பட்டுவருகிறது.
குனியமுத்துார், இடையர்பாளையம், சரஸ்வதி ராமச்சந்திரன் வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் நடந்த வினாடி-வினா போட்டியில், 185 பேர் தகுதி சுற்றுக்கான பொது அறிவுத்தேர்வு எழுதினர்.
இதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 பேர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது. மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்ட போட்டியில், 'ஏ' அணியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவர்கள் ஸ்ரீ கணேசன், முகமது அஜ்மல் ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு, பள்ளி அறங்காவலர் ரவீந்தரன், முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் யோகிதா ஆகியோர் பரிசுகள் வழங்கினர். ஒருங்கிணைப்பாளர் மெர்சி மெட்டில்டா ஆகியோர் உடனிருந்தனர்.
அதேபோல், பீளமேடு கோபால் நாயுடு மேல்நிலைப் பள்ளியில், 50 பேர் தகுதிச்சுற்றுக்கான பொது அறிவுத்தேர்வு எழுதினர். போட்டியின் நிறைவில், 'எப்' அணியை சேர்ந்த, 9ம் வகுப்பு மாணவர் லோகேஷ் குமார், எட்டாம் வகுப்பு மாணவர் விஜயகண்ணன் ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி நிர்வாக அலுவலர் ரவிக்குமார், தலைமையாசிரியர் சவுந்தரராஜ், உதவி தலைமை ஆசிரியர் ஜெயகுமார் ஆகியோர் பரிசுகள் வழங்கினர். ஆசிரியர் பாரதி, வரவேற்பாளர் ஹேமலதா ஆகியோர் உடனிருந்தனர்.---