பக்திவழியில் ஒரு புரட்சிப்பெண், அக்கா மஹாதேவி!
அரசன் எவ்வழியோ குடிகளும் அவ்வழி என்று சொல்வாகள். அரசனுக்கு மனைவியாகி விட்டாலோ கேட்கவும் வேண்டுமா?! ஆனால் அரசனின் உடமையாகிவிட்டபோதும் அந்தப்புரத்தோடு தங்கி சுகமாக காலத்தை கழிக்காமல், சிவபக்தியின் விளைவால் அனைத்தையும் உதறியெறிந்தாள் அக்கா மஹாதேவி எனும் ஒரு புரட்சிப் பெண்! இங்கே அக்கா மஹாதேவியின் வாழ்க்கை, ஒரு பார்வை!
"சிவனே! எனக்கு உணவு கிடைக்காமல் போக வேண்டும்! உன்னில் நான் கலந்திடத் துடிக்கும் என் ஆதங்கத்தை என் உடலும் உணரட்டும்! உனது அங்கமாக மாறிட முடியாமல் தவிக்கும் என் வேதனையை என் உடலும் வெளிப்படுத்தட்டும்! நான் உணவு உண்டால் என் உடல் திருப்தி அடையும். அப்போது எனது உணர்வு என் உடலுக்குத் தெரியாது. அதனால் எனக்கு உணவு கிடைக்காமல் இருக்க அருள்புரிவாய்! அப்படி என்னிடம் உணவு வந்து சேர்ந்து விட்டாலும் அதனை நான் என் வாயில் இடும்முன் அது கீழே மண்ணில் விழுந்திட அருள்புரிவாய்! முட்டாளாகிய நான் அதனை எடுக்க விழையும் முன் ஒரு நாய் வந்து அதனை எடுத்துச் செல்ல அருள் புரிவாய்!”
இப்படி சிவனிடம் அழுது வேண்டிக் கொண்டிருந்தாள் அந்தப் பெண்.
பலருக்கும் ஆனந்தமாய் வாழ ஆயிரம் நிபந்தனைகள் உண்டு. தனக்கு என்னவெல்லாம் தேவையென கடவுளிடம் நீண்ட பட்டியலிடும் சாதாரண மனிதர்களுக்கு இந்த பிரார்த்தனை விநோதமாகத்தான் தெரியும்! சிவனைத் தவிர வேறெதுவும் தேவையில்லை என்ற தீவிரத்தில் இருக்கும் இவள், தன் தகித்திடும் சிவ தாகத்தை இப்படிக் கவிதையாக வெளிப்படுத்தினாள்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுத்தடி என்ற இடத்தில் பிறந்த அழகிய மங்கையான இவருக்கு அந்த தேசத்து மன்னருடன் திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. சிறுவயதிலிருந்தே மல்லிகார்ஜுனா என்றழைக்கப்படும் சிவாலயத்திற்கு செல்லும் பழக்கம் கொண்ட மஹாதேவி சிவனிடம் பக்தி கொண்டாள். தன் மனதில் தன்னை சிவனின் மனைவியாக உணர்ந்தாள். சிவனோடு தனக்கு ஏற்கனவே திருமணம் நடந்து முடிந்ததால் அரசனோடு நடந்திடும் இந்த திருமணத்தினை அர்த்தமற்றதாக உணர்ந்தாள். ஆனால் சமூகத்தின் சட்டப்படி இவள் அரசரின் மனைவியானாள்.
மஹாதேவியின் உள்ளம் சமூக சட்டத்திட்டங்களுக்கு உட்படுவதாயில்லை. தனது வாழ்வில் தனக்கு, “சிவன் மட்டுமே வேண்டும்” என்ற உள்ளத்து உறுதியும் அதற்கு இடையூறாக நிற்கும் எதையும் உடைத்தெறியும் தைரியமும் கொண்ட பெண்ணாக இருந்தாள். அவள் சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத பெண்ணாக இருந்திடினும், தான் நினைத்ததையே செய்தாள்.
திருமணமாகி சில ஆண்டுகள் நீடித்த இவர்களது வாழ்வில் அரசர் விரக்தி அடைந்தார். அவளை குற்றவாளி என அரசவையில் அனைவர் முன்பும் நிற்க வைத்து விசாரணை நடத்தினார். மனதில் தெளிவும் தீவிரமும் கொண்ட மஹாதேவி குற்றவாளியைப் போல் அரசவையில் அனைவர் முன்பும் நிறுத்தப்பட்டார். சமூகத்தின் எல்லைக் கோடுகளால் எந்த பாதிப்பும் அடையாத அந்த இளம் பெண் எதற்காகவும் கவலைப்படவில்லை.
அறிஞர் நிறைந்த அவையில் மஹாதேவி பேசினாள்.
“ஏய் முட்டாளே! நான் உனது மனைவியல்ல! சமூகத்தில் நிகழ்ந்த ஒரு நிகழ்வினால் நீ அப்படி நினைத்துக் கொள்ளலாம். ஆனால், அது உண்மையில்லை! என்னுள் இருக்கும் அனைத்தையும் நான் ஏற்கனவே கொடுத்து விட்டேன், நான் உனக்கு சொந்தமில்லை” என்றாள்.
மன்னர் பெரும் கோபம் கொண்டு “நீ என் மனைவி! நீ எனக்கு சொந்தமானவள் ஆவாய்! உனக்கு உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம் என அனைத்தையும் கொடுப்பது நான்! இப்படியிருக்க அந்த சிவனுக்கு எப்படி நீ சொந்தமாவாய்?” என்றார்.
மஹாதேவி ஒன்றும் பேசவில்லை. ஒரே ஒரு கணம் கூட யோசிக்கவும் இல்லை. மக்கள் நிறைந்த அவையில் 18 வயதான தேவி தன் ஆபரணங்களை ஒவ்வொன்றாக கழட்டினாள். பின்னர் எவரும் எதிர்பாரா வகையில் தன் ஆடைகளை கழட்டினாள். நிர்வாணமாக அந்த சபையை விட்டு வெளியேறினாள். மஹாராணியாய் தேசத்தை ஆளும் வாய்ப்பு கிடைத்தும் பிச்சை எடுக்க புறப்பட்டாள். அரண்மனை வாழ்வையும் ராஜ போகத்தையும் ஒரே நொடியில் தூக்கி எறிந்தாள்! ஆடைகளை மட்டும் அல்ல! தன் அகங்காரத்தையும், வெட்கத்தையும் தூக்கி எறிந்தாள். தன்னையே தூக்கி எறிந்தாள்.
இந்த நவீன யுகத்திலும் பெண்களைச் சுற்றி உள்ள எல்லைக் கோடுகள் பல தளர்த்தப்படாமலேயே இருக்கும்போது சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் இருந்த சமூகக் கட்டுப்பாடுகளையும் சூழ்நிலையையும் அவள் எப்படி எதிர்கொண்டாள்? எப்படி தனியாக வீதியில் பிச்சை பாத்திரம் ஏந்தி அலைந்தாள்? எப்படி நிர்வாண நிலையில் சிவ மந்திரம் உச்சரித்தபடி ஊர் ஊராய் சுற்றினாள்? என எண்ணிடும்போதே அவள் சிவன் மீது கொண்ட பக்தியின் தீவிரம் விளங்கிடும்.
அவளது உள்நிலையில் “ஆண், பெண்” என்பதெல்லாம் இல்லை. அவளைப் பொறுத்தவரையில் சிலர் ஆண் உடலோடு வந்திருக்கிறார்கள். சிலர் பெண் உடலோடு வந்திருக்கிறார்கள். இவரை அதிர்ச்சியுடன் பார்க்கும் சமூகத்திடம் மஹாதேவி, “நான் பெண்ணில்லை, ஆணுமில்லை. என்னை ஏன் இப்படிப் பார்க்கிறீர்கள்” என்றாள்.
இப்படியும் ஒரு பெண் இந்த தேசத்தில் வாழ்ந்தாளா? என வரும் சந்ததியினர் அனைவரையும் வியக்க வைத்த இவள் கர்நாடக மாநிலத்தில் “அக்கா” என அழைக்கலானார். இதயத்தை ஊடுருவி உள்நிலையை தட்டியெழுப்பிடும் இவரது வார்த்தைகள் கன்னட இலக்கிய உலகில் பெரும் இடத்தை பிடித்திருக்கிறது.
“இறைவனின் உடலை மிக நெருக்கமாகக் கட்டியணை.
அப்படி அணைத்திடும்போது உந்தன் எலும்புகள் நொறுங்கட்டும்” என்று பாடினாள்.
இவள் உதிர்த்த வார்த்தைகள் மனதில் எழுச்சியை உருவாக்கிடும், இவ் வாழ்க்கையை நினைத்து நிலை கொள்ளாமல் செய்துவிடும். மறக்க இயலா அனுபவத்தை அளித்திடும். ஒரு பெண்ணின் அனுபவத்தில் ஏற்பட்ட வார்த்தைகளா என ஒருவரை மலைத்திட வைத்திடும்.
பக்தி மார்க்கத்தில் உச்சநிலையை அடைந்த மீரா, ராமகிருஷ்ணரைப் போல அக்கா மஹாதேவியின் உள்நிலை, சமூகத்தில் எவராலும் புரிந்துகொள்ள முடியாத பித்து நிலையாய் இருந்தது. சமூகத்தில் இருப்பவர்கள் இவளை பைத்தியம் போல் பார்த்தனர். ஆனால், அக்கா மஹாதேவி சிவனிடம் முழுமையாக கலந்திடத் துடித்தாள். தன் இதயம் கவர்ந்த மல்லிகார்ஜுனரை எண்ணிக் கசிந்துருகிப் பாடினார். தம் இளம் வயதிலேயே தன் உடலை நீத்த இவர் தனது தீவிரத்தையும் தெய்வீக மதுரசத்தையும் தன் பாடல்களில் விட்டுச் சென்றார்.