'ஒருங்கிணைந்த இந்தியா' மாநாடு; பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளுக்கு அழைப்பு

புதுடில்லி: இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 150வது ஆண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. இதில், பங்கேற்க வருமாறு பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 150வது ஆண்டு தினத்தையொட்டி, 'ஒருங்கிணைந்த இந்தியா' எனும் தலைப்பில் ஜன.,15ம் தேதி கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு அண்டை நாடுகளான, பாகிஸ்தான், வங்கதேசம், பூடான், ஆப்கானிஸ்தான், மியான்மர், மாலத்தீவு, இலங்கை, நேபாளம் உள்ளிட்ட ஆசிய துணைக் கண்டத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கருத்தரங்கு ஒன்றுக்கு அண்டை நாடுகளை பங்கேற்க அழைப்பு விடுப்பது இதுவே முதல்முறையாகும்.


இதில், பாகிஸ்தான் அழைப்பை ஏற்று, இந்த கருத்தரங்கில் பங்கேற்பதாக உறுதியளித்து விட்டது. வங்கதேசம் இதுவரையில் எந்த பதிலும் கொடுக்கவில்லை.


இது குறித்து வானிலை துறை அதிகாரி கூறுகையில், " இந்திய வானிலை மையத்தின் 150 ஆண்டு தின கொண்டாட்டத்தில் அனைத்து நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறோம்", எனக் கூறினார்.


இந்த நிகழ்ச்சியில் மத்திய அரசின் பல்வேறு துறை அமைச்சர்கள் பங்கேற்க இருக்கின்றனர். நிதியமைச்சகத்தின் சார்பில் ரூ.150 சிறப்பு நாணயம் வெளியிடப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், இந்திய வானிலை ஆய்வு மையத்தை கவுரவிக்கும் விதமாக, குடியரசு தின அலங்கார ஊர்தி பேரணியில், வானிலை ஆய்வு மையம் குறித்த ஊர்தியும் பங்கேற்க நிதியமைச்சகம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Advertisement