இரும்பு ஆலையில் விபத்து: 25 பேர் கதி என்ன?
ராய்ப்பூர்,
சத்தீஸ்கரின் முங்கேலி பகுதியில் உள்ள இரும்பு ஆலையின் புகைப்போக்கி இடிந்து விழுந்தது; இடிபாடுகளில், 25 பேர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
சத்தீஸ்கர் மாநிலம் முங்கேலி மாவட்டம் சரகான் பகுதியில் இரும்பு ஆலை கட்டுமானப் பணி நடந்து வருகிறது. நேற்று, இங்கு தொழிலாளர்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆலையின் புகைப்போக்கி திடீரென இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
கட்டட இடிபாடுகளில் சிக்கி இருவர் காயம் அடைந்தனர். 25க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்புப்படையினர் காயம் அடைந்த இருவரையும் மீட்டு பிலாஸ்பூர் மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடக்கிறது. விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர்.