'ஐ.க்யூ., குறைவாக இருக்கும் பெண் குழந்தை பெற்றுக்கொள்ள கூடாதா?'

மும்பை, 'ஐ.க்யூ., எனப்படும் நுண்ணறிவு திறன், சராசரியைவிட சற்று குறைவாக இருப்பதால், ஒரு பெண்ணால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாதா?' என, மும்பை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மூளை வளர்ச்சி



திருமணமாகாத, ஐ.க்யூ., குறைவாக உள்ள 27 வயது மகளின், 21 வாரக்கருவைக் கலைக்க அனுமதி கோரி, அந்த பெண்ணின் தந்தை வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம் கூறியுள்ளதாவது:

இந்த பெண், ஐந்து மாதக் குழந்தையாக இருந்தபோது மனுதாரர் தத்தெடுத்து வளர்த்து உள்ளார்.

தன் பெண்ணுக்கு மூளை வளர்ச்சி குறைவாக உள்ளதால், கருவை கலைக்க அனுமதி கேட்டுள்ளார்.

பரிசோதனை செய்த டாக்டர்கள் குழு, 'அந்த பெண்ணுக்கு மூளை வளர்ச்சி பாதிப்பு ஏதும் இல்லை. ஐ.க்யூ., எனப்படும் நுண்ணறிவு திறன், சராசரியைவிட, சற்றுக் குறைவாக உள்ளது' என, கூறியுள்ளது.

யார் காரணம்



மேலும், அந்த பெண் முழுஉடல் தகுதியுடன் இருப்பதாகவும், விருப்பப்பட்டால், கருவை கலைக்கலாம் என்றும் டாக்டர்கள் குழு தெரிவித்துள்ளது.

அந்த பெண்ணின் கருவைக் கலைக்க வேண்டும் என்று அவருடைய தந்தை வழக்கு தொடர்ந்துஉள்ளார்.

ஆனால் குழந்தை பெற்றுக்கொள்ள அந்தப் பெண் விருப்பப்படுகிறார். நுண்ணறிவு திறன் சராசரியைவிட சற்று குறைவாக இருப்பதால், அவர் குழந்தை பெற்றுக்கொள்ளக் கூடாதா? அவ்வாறு கூடாது என்று நாங்கள் உத்தரவிட்டால், அது சட்டத்துக்கு எதிரானதாக அமைந்துவிடும்.

அந்த பெண், தன் கர்ப்பத்துக்கு யார் காரணம் என்பதை கூறியுள்ளார்.

குழந்தையாக இருந்தபோது தத்தெடுத்து வளர்த்துள்ள மனுதாரர், இந்த பெண்ணின் கர்ப்பத்துக்கு காரணமானவரிடம் பேசி, திருமணம் நடத்துவதற்கு முயற்சிக்க வேண்டும்.

இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.

Advertisement