சத்தீஸ்கரில் என்கவுன்டர் மூன்று நக்சல்கள் பலி
ராய்ப்பூர், சத்தீஸ்கரில் வனப்பகுதியில் நடந்த மோதலில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், மூன்று நக்சல்கள் கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மற்றும் பிஜப்பூர் மாவட்டங்களின் எல்லையில் உள்ள வனப்பகுதியில், நக்சல் தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் நேற்று காலை ஈடுபட்டனர்.
மாவட்ட ரிசர்வ் போலீசார், சிறப்பு அதிரடிப்படை போலீசார், மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் இணைந்து நடத்திய இந்த தேடுதல் வேட்டையின்போது, காட்டில் பதுங்கியிருந்த நக்சல்கள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் சுட்டதில் மூன்று நக்சல்கள் கொல்லப்பட்டனர்.
இது குறித்து, மாநில உள்துறை அமைச்சர் விஜய் சர்மா கூறியதாவது:
பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்ட மூன்று நக்சல்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து நக்சல் தேடுதல் வேட்டை நடக்கிறது. புத்தாண்டு பிறந்ததில் இருந்து இதுவரை ஒன்பது நக்சல்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.