மோப்ப நாய்களை தத்தெடுக்க வாய்ப்பு
புதுடில்லி, சி.ஆர்.பி.எப்., படையில் பயிற்சி பெற்று பணி ஓய்வு பெற்ற மோப்ப நாய்களை, பொதுமக்கள் தத்தெடுத்து வளர்க்க முதல்முறையாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் மோப்ப நாய் படைப்பிரிவு உள்ளது.
இதில், சிறப்பு பயிற்சி பெற்ற நாய்கள் நக்சல் எதிர்ப்பு, பயங்கரவாத தடுப்பு பணிகளில் செயலாற்றியதுடன், சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை மோப்பம் பிடித்து பல உயிர்களை காத்துள்ளன.
பொதுவாக பாதுகாப்பு படைப்பிரிவில் பணியாற்றி ஓய்வு பெறும் நாய்களை பொதுமக்களிடம் தத்து கொடுத்தால், அவை தேசவிரோத பணிகளுக்கு பயன்படுத்தப்பட கூடும் என்பதால், பதிவு பெற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிரபல நிறுவனங்களிடம் ஒப்படைப்பது வழக்கம்.
தற்போது, சி.ஆர்.பி.எப்., படைப்பிரிவில் ஓய்வு பெற்ற நான்கு கால் வீரர்களை, 'ஆன்லைன்' வாயிலாக பொதுமக்களுக்கு தத்துக் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது, பெல்ஜியன் ஷெப்பர்ட் மாலினோயிஸ், ஜெர்மன் ஷெப்பர்ட், லாப்ரடார், உள்நாட்டு வகையான முதோல் வேட்டை நாய்கள் தத்துக் கொடுக்கப்பட உள்ளன. நாய்களை தத்தெடுக்க கட்டணம் இல்லை.
சி.ஆர்.பி.எப்., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்களை பார்த்து நாய்களை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம்.
பல்வேறு கட்ட தீவிர ஆய்வு மற்றும் கண்காணிப்புக்கு பிறகே நாய்கள் தத்துக் கொடுக்கப்பட உள்ளன என, சி.ஆர்.பி.எப்., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.