ஆர்.டி.ஓ., ஆபீசில் 1,200 காலி இடங்கள் மன உளைச்சலில் சிக்கியுள்ள அலுவலர்கள்
வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், 1,200க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களால், மன உளைச்சலில் அலுவலர்கள் சிக்கி தவிக்கின்றனர்.
தமிழக போக்குவரத்து துறையில், 12 சரகம், 91 வட்டார போக்குவரத்து அலுவலகம், 56 பகுதி அலுவலகம், 22 சோதனைச்சாவடிகள் உள்ளன.
இத்துறை மூலம் டிரைவிங் லைசென்ஸ் உரிமம் வழங்குதல், புதுப்பித்தல்; கண்டக்டர் உரிமம் வழங்குதல், புதுப்பித்தல்; ஓட்டுநர் பயிற்சி பள்ளிக்கு உரிமம் வழங்குதல், புதுப்பித்தல்; புதிய வாகனங்களை பதிவு செய்தல்; விபத்துக்கு முதல்வர் நிவாரண நிதி வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஒவ்வொரு, ஆர்.டி.ஓ., அலுவலகத்திலும் தினமும் குறைந்தது, 100 முதல், 150 வாகனங்கள் பதிவு, தகுதிச்சான்று பெறுவதற்காக வரும். தவிர நுாற்றுக்கணக்கானோர், 'டிரைவிங் லைசென்ஸ்' பெறுவதற்கு குவிவர்.
போராட்டம்
கணினி, நவீன தொழில்நுட்பம் இருந்தபோதும், அதிக பணியிடம் காலியாக உள்ளதால், உரிய நேரத்தில் டிரைவிங் லைசென்ஸ், வாகன பதிவு சான்று, புதுப்பித்தல் பணிகளை விரைந்து மேற்கொள்ள முடியாமல், ஊழியர்கள் சிக்கித் தவிக்கின்றனர்.
குறிப்பாக சேலம் சரகத்தில், 8 வட்டார போக்குவரத்து, 4 மோட்டார் வாகனம் உள்பட, 14 அலுவலகங்கள் உள்ளன.
இங்கு, 8 போக்குவரத்து அலுவலருக்கு, 3 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். 2024 ஏப்ரலில், 40 சதவீத காலி பணியிடம் நிரப்புதல் உள்பட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்து துறை பணியாளர் சங்கத்தினர் போராட்டம் நடத்தியும் பலனில்லை.
இதுகுறித்து, போக்குவரத்துத்துறை அலுவலர்கள் கூறியதாவது:
இத்துறையில் உள்ள, 3,127 பணியிடங்களில் தற்போது, 1,900 அலுவலர்களே உள்ளனர். 1,200க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் ஆர்.டி.ஓ., - மோட்டார் வாகன ஆய்வாளர் உள்ளிட்ட அலுவலர்கள், கூடுதல் பணிப்பளுவுடன், மன உளைச்சலில் பணிபுரிகின்றனர்.
முதல் நிலை மோட்டார் வாகன ஆய்வாளர்களில், 45 பேர், வட்டார போக்குவரத்து அலுவலராக பதவி உயர்வில் உள்ளனர்.
இவர்கள், அப்பணிக்கு சென்றால் காலி பணியிடம் மேலும் அதிகமாகும்.
வாகன ஆய்வாளர்கள், அமைச்சு பணியாளர்களுக்கு, ஆர்.டி.ஓ., பணியிட பதவி உயர்வு முறையே, 4:1 என்ற விகிதத்தில் வழங்கப்படும். தற்போது இந்த வாய்ப்பும் மறுக்கப்படுகிறது. கடந்த டிசம்பரில் டிரைவிங் லைசென்ஸ், வாகன பதிவு சான்றுக்கான ஸ்மார்ட் கார்டு, போதிய அளவில் வராததால், உடனுக்குடன் கார்டு வழங்க முடியவில்லை.
'கவனிப்பு'
ஸ்மார்ட் கார்டு தயாரிப்பு, ஸ்மார்ட் கார்டை பதிவு தபாலில் அனுப்புவதற்கான அரசு முத்திரையுடன் கூடிய தபால் உறை தயாரிப்பு ஆகிய பணிகள், தனியாருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளன. ஆனால், 500 எண்ணிக்கையில் தயாரிக்கப்பட வேண்டிய ஸ்மார்ட் கார்டு, 400 எண்ணிக்கையில் தான் கிடைக்கிறது; தபால் உறைக்கும் அதே நிலை தான்.
ஆர்.டி.ஓ., அலுவலகங்களை, ஏ, பி, சி என, பிரித்துள்ளனர். வாகன எண்ணிக்கைப்படி பிரித்ததாக கூறினாலும், வருவாய் மூலம், 'கவனிப்பு' பெறும் அலுவலகங்களாக தான், இப்படி பிரித்துள்ளனர். இத்துறை பிரச்னைகளை, அமைச்சரிடம் கூறினாலும் அவர் கண்டுகொள்வதில்லை.
அமைச்சரின் உதவியாளர், இத்துறையில் உள்ள சீனியரான ஒரு நேர்முக உதவியாளர் மூலம், அனைத்து இட மாறுதல், பதவி உயர்வு உள்ளிட்டவற்றை, 'கவனிப்பு' மூலம் மேற்கொள்கிறார். இளநிலை உதவியாளர், மேற்பார்வையாளர் போன்ற பல்வேறு பணியிடங்களில், புது பணியிடம், பதவி உயர்வு கிடப்பில் உள்ளது.
உதவியாளர் பதவி உயர்வும், மூன்று ஆண்டுகளாக மேற்கொள்ளப்படவில்லை. காலி பணியிடத்துக்கு கூடுதல் பொறுப்பு வகிக்கும் அலுவலர்கள், மாதந்தோறும், 'கவனிப்பு' குறித்து இலக்கு நிர்ணயித்து, வசூல் நடத்தி வருகின்றனர்.
சரியான முறையில் வசூல் மற்றும் கவனிப்பு தரும் அலுவலர்கள், தொடர்ந்து ஒரே பணியிடத்தில் உள்ளனர். 'ரெய்டு'களில் சிக்கினாலும், 'சரி செய்து' விடுகின்றனர். இத்துறையில் உள்ள பிரச்னைகளை, முதல்வர் ஆய்வு செய்து, காலி பணியிடம் உள்ளிட்டவற்றை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -