தலைமையில் தெளிவில்லாத 'இண்டி' கூட்டணியை... கலைத்துவிடுங்கள்! ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் வெளிப்படை
புதுடில்லி, 'இண்டி' கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இடையே ஏற்பட்டுள்ள லடாய் காரணமாக, கூட்டணியில் உள்ள கட்சிகள் காங்கிரசை தனிமைப்படுத்த துவங்கியுள்ளன. இதற்கிடையே, ''லோக்சபா தேர்தலுக்காகத்தான் இண்டி கூட்டணி என்றால், அதை கலைத்துவிடுவதே நல்லது,'' என, ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா வெளிப்படையாக பேசியிருப்பது கூட்டணியை கலகலக்க செய்துள்ளது.
கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வை வீழ்த்துவதற்காக உருவாக்கப்பட்ட, 'இண்டி' கூட்டணி ஆரம்பத்தில் இருந்து பல்வேறு குழப்பங்களை சந்தித்து வருகிறது.
கூட்டணிக்கு தலைமை யார், பிரதமர் வேட்பாளர் யார் என்ற போட்டியில் ஆளாளுக்கு ஒரு கருத்து சொல்ல, தலைவர்களுக்குள் ஒருங்கிணைப்பு இல்லாமல் லோக்சபா தேர்தலில் அந்த கூட்டணி தோல்வியை சந்தித்தது.
விரிசல்
அடுத்து நடந்த ஹரியானா, மஹராஷ்டிரா சட்டசபை தேர்தல்களிலும், காங்.,கின் பெரியண்ணன் போக்கு காரணமாக இந்த கூட்டணி கோட்டை விட்டது. இந்த அதிருப்தி, பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரின்போது வெளிப்படையாக எதிரொலித்தது.
அதானி விவகாரம் முதல் அம்பேத்கர் விவகாரம் வரை காங்., உடன் கைக்கோர்த்து நிற்க கூட்டணி கட்சியினர் முரண்டு பிடித்தனர். அப்போது கூட்டணியில் விரிசல் துவங்கியது.
இதைத் தொடர்ந்து டில்லி சட்டசபை தேர்தல் பணிகள் துவங்கின. இண்டி கூட்டணியை சேர்ந்த ஆம் ஆத்மி, காங்., தனித்து போட்டியிடுகின்றன.
இவர்களுக்கு இடையே வார்த்தைப் போர் மூண்டன. இண்டி கூட்டணியின் முக்கிய கட்சிகளான சமாஜ்வாதியும், திரிணமுலும், காங்.,கை கழற்றி விட்டு ஆம் ஆத்மிக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தன.
இதுகுறித்து, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வியிடம் கேட்டதற்கு, 'லோக்சபா தேர்தலுக்காக தான், இண்டி கூட்டணி அமைக்கப்பட்டது. பா.ஜ.,வை தோற்கடிப்பது மட்டுமே அதன் நோக்கம்' என, தெரிவித்தார்.
லோக்சபா தேர்தலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணியில், ஏறத்தாழ தனிமைப்படுத்தப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பது காங்கிரஸ் தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குழப்பம்
வரும் நாட்களில் இது இன்னும் தீவிரமானால், தேசிய அரசியலின் போக்கே கூட மாறத் துவங்கும்.
தேஜஸ்வியின் கருத்துக் குறித்து, ஜம்மு - காஷ்மீர் முதல்வரும், இண்டி கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான ஒமர் அப்துல்லாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் அளித்த பதில்:
என் நினைவுக்கு எட்டியவரை, இண்டி கூட்டணி உருவாக்கப்பட்ட போது கால அளவு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. பிரச்னை என்னவென்றால், லோக்சபா தேர்தலுக்குப் பின் கூட்டணி தலைவர்கள் கூட்டம் நடத்தப்படவில்லை.
கூட்டணிக்கு தலைமை வகிப்பது யார் என்பதிலும், எதிர்கால செயல் திட்டத்திலும் தெளிவில்லை. இந்த கூட்டணி தொடருமா என்பதிலேயே குழப்பம் உள்ளது.
டில்லி சட்டசபை தேர்தல் முடிந்த பிறகாவது, கூட்டணி கட்சி தலைவர்களை அழைத்து கூட்டம் நடத்த வேண்டும்.
இண்டி கூட்டணி லோக்சபா தேர்தலுக்கு மட்டுமானது என்றால், கூட்டணியை கலைத்து விடுவதே சிறந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.