விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை கடத்திரூ.1 லட்சம் கேட்டு மிரட்டிய 5 பேருக்கு வலை
ஓசூர், : விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை கடத்தி, ஒரு லட்சம் ரூபாய் கேட்டு லாட்ஜில் அடைத்து வைத்து மிரட்டிய, ரியல் எஸ்டேட் அதிபர் உட்பட, 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை அடுத்துள்ள தென்பகம் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தரம், 44, பார்சல் சர்வீஸ் லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் ராயக்கோட்டை திருமண மண்டபம் அருகில், தர்மபுரி சாலையில் லாரியை ஓட்டி சென்றுள்ளார். போக்குவரத்து நெரிசலில் சிக்கிய அவர், லாரியை பின்னோக்கி எடுக்க முயன்றுள்ளார். அப்போது பின்னால் நின்ற கார் மீது லாரி மோதியது. இதனால், காரில் இருந்தவர்கள் டிரைவர் சுந்தரத்திடம் வாக்குவாதம் செய்தனர்.
கார் பழுதை சரிசெய்ய, ஒரு லட்சம் ரூபாய் கேட்டு தகராறில் ஈடுபட்டதுடன், அவரை தாக்கி, காரில் கடத்தி, லாட்ஜ் ஒன்றில் அடைத்து வைத்து, பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அங்கிருந்து தப்பிய சுந்தரம், ராயக்கோட்டை போலீசில் புகார் அளித்தார்.
விசாரணையில், லாரி டிரைவர் சுந்தரத்தை கடத்தி பணம் கேட்டு மிரட்டியது, ராயக்கோட்டை கோட்டையை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் கிருஷ்ணமூர்த்தி, 37, லிங்கனம்பட்டியை சேர்ந்த வெங்கடேஷ், 31, சிங்கம் மற்றும் இருவர் என தெரிந்தது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.