பெண்ணை பின்தொடர்ந்தால் 5 ஆண்டு சிறை!

209

சென்னை: பெண்களுக்கு துன்பம் விளைவித்தலை தடை செய்கிற சட்ட திருத்த மசோதாவை சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்தார். பாலியல் வன்கொடுமை வழக்கில், 14 ஆண்டுக்கு குறையாமல் கடுங்காவல் தண்டனை அளிக்கும் வகையில் மசோதா கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டுள்ளது.


சட்டதிருத்த மசோதாவின் அம்சங்கள் என்னென்ன?


* ஆசிட் வீச்சு சம்பவம் ஏற்பட்டால், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறை அல்லது ஆயுள் தண்டனை

* பாலியல் வன்கொடுமை வழக்கில், 14 ஆண்டுகளுக்கு குறையாமல் கடுங்காவல் தண்டணை.



* மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானால் ஆயுள் அல்லது மரண தண்டனை


* பெண்ணை பின் தொடர்ந்தால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை; ஜாமினில் வெளியே வர முடியாது.


* குறிப்பிட்ட சில குற்றங்களில் பாதிக்கப்பட்டோரின் அடையாளத்தை வெளிப்படுத்தினால் 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை


* நெருங்கிய உறவினரால், அதிகாரம் மிக்கவரால் பலாத்கார வழக்குகளில் ஆயுளுக்கும் சிறை.


* கூட்டு பலாத்காரம், 18 வயதுக்கு உட்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்தல் போன்றவற்றுக்கும் ஆயுள் சிறை தண்டனை



முதல்வர் தாக்கல் செய்த இந்த மசோதா இன்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

கடும் நடவடிக்கை



சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: பெண்களின் சமூகப் பங்களிப்பு அதிகமாகி வருகிறது. இத்தகைய சூழலில் பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலமாக, தமிழகம் திகழ்ந்து வருகிறது. பெண்கள் அதிகம் வேலைக்குச் செல்லும் மாநிலமாக, பெண்கள் அதிகமான சமூகப் பங்களிப்பு வழங்கும் மாநிலமாக தமிழகம் வளர்ந்து வருகிறது. அதேநேரத்தில், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்தாக வேண்டும். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோர் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுத்து, சட்டப்படி அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய தண்டனைகளை வாங்கித் தருவதிலும் உறுதியோடு செயல்பட்டு வருகிறது தமிழக அரசு.

இரும்புக்கரம்



அரசின் இந்த நடவடிக்கைகளைப் பற்றி இந்த மாமன்றத்தில் நான் பலமுறை எடுத்துரைத்துள்ளேன். பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கி ஒடுக்கி வருகிறது இந்த அரசு. 86 விழுக்காட்டிற்கு மேலான வழக்குகளில் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது இந்த அரசில்தான். பள்ளிகள், கல்லூரிகள், பொது இடங்களில் பெண்கள் பாதுகாப்பு பற்றி 2 லட்சத்து 39 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டியுள்ளதும் இந்த அரசுதான்.

தூக்குத் தண்டனை



சத்யா என்ற பெண் ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்குத் தண்டனை பெற்றுக் கொடுத்திருப்பதும் இந்த அரசுதான். அனைத்துப் பெண்களது பாதுகாப்பையும் உறுதி செய்யும் அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் வன்கொடுமை என்பது யாராலும் மன்னிக்க முடியாத குற்றம். இத்தகைய கொடூரக் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு வழங்கப்பட வேண்டிய தண்டனை என்பது, இத்தகைய செயல்களில் ஈடுபட முனைவோருக்கான கடும் எச்சரிக்கையாக இருந்திட வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Advertisement