அதிபர் மாளிகையில் தாக்குதல்: சாட் நாட்டில் 19 பேர் பலி
நஜமேனா: ஆப்ரிக்க நாடான சாட்டில் உள்ள அதிபர் மாளிகையில் புகுந்த மர்மநபர்கள், துப்பாக்கியால் சுட்டதில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உட்பட 19 பேர் பலியாகினர்.
ஆப்ரிக்க நாடான சாட்டில் ராணுவ ஆட்சி நடக்கிறது. இங்கு சமீபத்தில் நடந்த பொதுத்தேர்தலில் ராணுவ அதிகாரியான முகமது டேபே இட்னோ அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைநகர் நஜ்மேனாவில் உள்ள இவரது மாளிகையில் நேற்று முன்தினம் இரவு துப்பாக்கிகள், கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வாகனங்களில் வந்த மர்ம நபர்கள், மாளிகை வாயிலில் வாகனங்களை நிறுத்தி விட்டு சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
சுதாரித்த அங்கிருந்த பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். இதில், தாக்குதல் நடத்தியவர்கள் தரப்பில் 18 பேர் பலியாகினர். அதிபர் மாளிகை பாதுகாப்பு படை வீரர் ஒருவரும் உயிரிழந்தார்.
தாக்குதல் நடந்தபோது அதிபர் இட்னோ மாளிகையில் இருந்தார். அதிர்ஷ்டவசமாக அவர் காயம் இன்றி தப்பினார். சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் கீ இந்த நாட்டுக்கு பயணமாக வந்த அதே நாளில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
தாக்குதல் குறித்து சாட் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்டரமன் கவுலமல்லா கூறியதாவது:
இது போகோ ஹரம் என்ற அமைப்பின் பயங்கரவாத தாக்குதல் அல்ல. தலைநகரில் உள்ள இளைஞர்கள் சிலர் போதையில் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு அதிபர் மாளிகை பாதுகாப்பு படையினர் தக்க பதிலடி கொடுத்து தாக்குதலை முறியடித்தனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.