ஐ.சி.எப்., ரொம்ப நல்லா இருக்கு; தமிழில் பேசி அசத்தினார் அஸ்வினி வைஷ்ணவ்!
சென்னை: சென்னை வந்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''ஐ.சி.எப்., நல்லா இருக்கு. ரொம்ப நல்லா இருக்கு,'' என பேசி அசத்தினார்.
அனைத்து தரப்பு மக்களுக்குமான சிறப்பான ரயில் சேவையை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு வழங்கி வருகிறது. மத்திய அரசு, இந்திய தயாரிப்பு பொருட்களை உலக நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்து வருகிறது. ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரயில் பெட்டிகளின் உள்கட்டமைப்பு வசதிகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் 10,000 ரயில் எஞ்சின்களில் 'கவாச்' தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. 'அம்ரித் பாரத்' ரயில் பெட்டிகளில், பயணிகளின் வசதிக்காக அம்சங்கள் மேம்படுத்தப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,''ஐ.சி.எப்., நல்லா இருக்கு. ரொம்ப நல்லா இருக்கு,'' என்று கூறி, சென்னை ஐ.சி.எப்., ஆலையில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்களை பாராட்டினார். அவர், தமிழில் நன்றி, ரொம்ப நன்றி என கூறி உரையை முடித்தார்.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அஷ்வினி வைஷ்ணவ், மின்னணு தகவல் தொடர்பு பொறியியல் பட்டம் பெற்றவர். கான்பூர் ஐ.ஐ.டி.,யில் முதுகலை பொறியியல் பட்டமும், பென்சில்வேனியா வார்டன் பல்கலை கல்லுாரியில் எம்.பி.ஏ., பட்டமும் பெற்றவர். ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்ற அவர், ஒடிசா மாநிலத்தில் இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாக பணியாற்றினார். பின்னர் மத்திய அரசுப்பணிக்கு வந்த அவர், வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அவரது தனிச்செயலாளராக பணியாற்றினார். பின்னர் அரசு பணியில் இருந்து தானாக முன் வந்து ஓய்வு பெற்றவர், ஒடிசாவில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டார். 2021 முதல் மோடி அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றி வருகிறார்.