அமைச்சர் மா.சுப்பிரமணியன் விடுதலை; 22 ஆண்டுகளாக நடந்த வழக்கில் கோர்ட் தீர்ப்பு

3

சென்னை: கடந்த 2002ம் ஆண்டு அ.தி.மு.க., கவுன்சிலர்களை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்பட அனைவரையும் விடுதலை செய்து எம்.பி., எல்.எல்.ஏ.,க்களின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.


கடந்த 2002ம் ஆண்டு நடந்த சென்னை மாமன்ற கூட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க.,வினரை தாக்கியது, கொலை மிரட்டல் விடுத்தது, பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அதிமுக சார்பாக சுகுமார் பாபு, மாமன்ற செயலர் ரீட்டா உள்ளிட்டோர் தற்போதைய அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீது தொடர்ந்தனர். அவருடன், சிவாஜி, தமிழ்வேந்தன், நெடுமாறன், மூர்த்தி, வி.எஸ்.பாபு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது.


இந்த 7 பேர் மீதான புகார் குறித்து 22 ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்தது. மொத்தம் 70 பேரிடம் சாட்சியம் பெறப்பட்டது. அனைத்து கட்ட விசாரணைகளுக்கு பிறகு, இன்று (டிச.,10) தீர்ப்பு வழங்கப்படும் என்று மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு கோர்ட் உத்தரவிட்டிருந்தது.


அதன்படி, இன்று வெளியான தீர்ப்பில், குற்றச்சாட்டுகள் முறையாக நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்வதாக கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. சாட்சியளித்தவர்களில் சிலர் பிறழ்சாட்சிகளாக மாறிய நிலையில் இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Advertisement