கனடா பிரதமர் தேர்தலில் களம் இறங்கும் இந்தியர்; யார் இந்த சந்திரா ஆர்யா?

3


ஒட்டாவா: கனடா பிரதமர் தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனடா எம்.பி.யான சந்திரா ஆர்யா போட்டியிடுவேன் என அறிவித்துள்ளார்.

சர்வதேச அரங்கில் மட்டும் அல்லாமல், உள்நாட்டிலும் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலக வேண்டும் என அவர் சார்ந்த லிபரல் கட்சி எம்.பி.,க்கள் போர்க்கொடி தூக்கினர். இதனையடுத்து அவர் ஜன.,06ம் தேதி கட்சித் தலைவர் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார். புதிய தலைவர் தேர்வாகும் வரை, பதவியில் நீடிப்பேன் எனக் கூறியிருந்தார். இந்தாண்டு கனடாவில் தேர்தல் நடைபெற உள்ளன.



இந்நிலையில், கனடா பிரதமர் தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனடா எம்.பி.யான சந்திரா ஆர்யா போட்டியிடுவேன் என அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கனடாவை ஒரு இறையாண்மை கொண்ட குடியரசு நாடாக மாற்ற விரும்புகிறேன். எங்கள் தேசத்தை மீண்டும் கட்டியெழுப்பவும், எதிர்கால சந்ததியினருக்கான செழிப்பை பாதுகாக்கவும், திறமையான அரசை வழிநடத்தவும், நான் கனடாவின் பிரதமர் தேர்தலில் போட்டியிடுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

யார் இந்த சந்திரா ஆர்யா?




* இந்தியாவின் கர்நாடகாவைச் சேர்ந்தவர் சந்திரா ஆர்யா. இவருக்கு வயது 61.



* இவர் தற்போது கனடாவின் ஒட்டாவா நகரில் வசித்து வருகிறார்.



* இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கனடா பார்லிமென்டில், தாய்மொழியான கன்னடத்தில் பேசும் வீடியோ வைரலானபோது அவர் கவனம் பெற்றார்.


* இவர் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆதரவாளர். அவரது கட்சி எம்.பி.,யாக இருந்து வருகிறார்.


* சமீபத்தில் வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மற்றும் சிறுபான்மையினர் மீதான தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது என கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

Advertisement