தங்களை சார்ந்தோருக்கு ஒப்பந்த பணிகள் தி.மு.க., கூட்டணி எம்.எல்.ஏ.,க்கள் திருப்தி

திருச்சி:அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் வருவதால், தமிழகத்தில் இனி நடக்கும் வளர்ச்சி திட்டப் பணிகளுக்கான ஒப்பந்தங்களை, ஆளுங்கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் தொகுதிகளில், அவர்கள் கை காட்டுபவர்களுக்கே வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நடக்கும் வளர்ச்சித் திட்டப் பணிகளின் ஒப்பந்தங்கள், அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் யாரை சொல்கின்றனரோ அவர்களுக்கே வழங்கப்பட்டு வந்தது. இதனால் ஆளுங்கட்சி மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.,க்கள், தங்களைச் சார்ந்தோருக்கு ஒப்பந்தம் வேண்டும் என்றால், அந்தந்த மாவட்ட அமைச்சர்களிடம் சொல்லி, அவர்கள் தயவில் பெற்றுக் கொண்டிருந்தனர். பல மாவட்டங்களில், எம்.எல்.ஏ.,க்கள் சொல்பவர்களுக்கு ஒப்பந்தங்கள் கிடைக்காத சூழல் இருந்தது.

தங்கள் தொகுதியில் நடக்கும் பணிகளைக் கூட நம்மை சார்ந்தோருக்கு ஒப்பந்தங்களாக வாங்கிக் கொடுக்க முடியவில்லையே என்ற ஆதங்கம், தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.,களுக்கு இருந்து வந்தது. இதனால், அவர்கள் அமைச்சர்கள் மற்றும் ஆளும்கட்சி தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்தனர். இதனால், சில மாவட்டங்களில் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வந்தது.

அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில், இதே நிலை நீடித்தால், கட்சிக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை ஆளும்கட்சி தலைமை உணர்ந்திருக்கிறது. அதனால், இதை சரி செய்ய சில அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.

மீதமுயுள்ள ஆட்சிக் காலத்தில், வளர்ச்சி திட்டப் பணிகளுக்கான ஒப்பந்தங்களை, அந்தந்த தொகுதி எம்.எல்.ஏ.,க்கள் யாருக்கு பரிந்துரைக்கின்றனரோ, அவர்களுக்கே வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

அதன்படியே, திருச்சி மாவட்டத்தில் நேற்று முன் தினமும், நேற்றும் நடந்த ஊரக வளர்ச்சித்துறை சார்பிலான 60 கோடி ரூபாய்க்கும் மேலான ஒப்பந்தப் பணிகளை, பணி நடக்கும் தொகுதியின் எம்.எல்.ஏ.,க்கள் பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கே வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது நாள் வரையில், அதிருப்தியில் இருந்த தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.,க்கள் சந்தோஷமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement