பக்தி மணம் பரப்பும் காலண்டர் அறநிலையத்துறை வெளியீடு
பிரசித்தி பெற்ற கோவில்களின் உற்சவமூர்த்திகள் படங்களுடன், பக்தி மணம் பரப்பும் மாத காலண்டரை, ஹிந்து சமய அறநிலைத்துறை வெளியிட்டுள்ளது.
ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் பராமரிக்கப்படும் கோவில்களில், பக்தர்களுக்கு தேவையான வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. பக்தர்கள் வசதிக்காக, பிரசித்தி பெற்ற கோவில்களின் வரலாறு, வழிபாட்டு முறை, ஆன்மிக சுற்றுலா வழிகாட்டி உள்ளிட்ட ஆன்மிக புத்தகம் விற்கும் ஸ்டால்கள் திறக்கப்பட்டுள்ளன.
தற்போது அறநிலையத்துறை, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கும் உற்சவமூர்த்திகளின் வண்ண படங்களுடன், வழுவழுப்பான தாளில், மாத காலண்டர் வடிவமைத்து வெளியிடப்பட்டுள்ளது.
பவானி சங்கமேஸ்வரர், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி உடனுறை சம்புகேஸ்வரர், சேலம் - மேச்சேரி பத்ரகாளியம்மன், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள், கோவை - தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் உட்பட, முக்கிய கோவில்களின் உற்சவமூர்த்திகளின் ராஜ அலங்கார படத்துடன், மாதாந்திர காலண்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஹிந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'தமிழகம் முழுதும், அறநிலையத்துறை பராமரிப்பில் உள்ள கோவில்களில், புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள, 2025ம் ஆண்டுக்கான காலண்டர் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஒரு காலண்டர், 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது' என்றனர்.
-- நமது நிருபர் -