ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க., போட்டி: விட்டுக் கொடுத்தது காங்.,


சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரஸ் விட்டுக் கொடுத்தது. அங்கு தி.மு.க.,போட்டியிட உள்ளதாக தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்து உள்ளார்.


ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஆக இருந்த இளங்கோவன் மறைவை அடுத்து வரும் பிப்.,5ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் துவங்கி உள்ளது.


இந்நிலையில், இத்தொகுதியில் தி.மு.க., கூட்டணியில் போட்டியிட போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. காங்கிரஸ் மீண்டும் போட்டியிடும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கூறி வந்தார்.


இந்நிலையில், அங்கு தி.மு.க., போட்டியிட உள்ளதாக இன்று செல்வப்பெருந்தகை அறிவித்து உள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 2026 சட்டசபை தேர்தல் இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, காங்கிரஸ் தலைமை மற்றும் தமிழக காங்கிரஸ் தீவிர ஆலோசனைக்கு பிறகு நாங்கள் அனைவரும் ஒரு மனதாக ஏற்றுக்கொண்டு இண்டியா கூட்டணியின் சார்பாக ஈரோடு கிழக்கு தொகுதி இடை தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் போட்டியிடுவார் என்று இன்று உறுதிசெய்யப்பட்டது.


இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க நாட்டில் ஜனநாயகம் மலரச்செய்ய நாம் அனைவரும் ஒன்றினைந்து தி.மு.க., வேட்பாளரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம். இவ்வாறு அந்த அறிக்கையில் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

Advertisement