சென்ட்ரல் - கும்மிடி மார்க்கத்தில் புறநகர் ரயில் சேவை...பாதிப்பு!:மின்கொக்கி பழுதால் நள்ளிரவில் பயணியர் பரிதவிப்பு பொன்னேரி, ஜன. 11-

உயர் அழுத்த மின்கம்பியில் இருந்து, ரயில்களுக்கு மின்சாரம் கடத்தும், 'பாண்டோகிராப்' எனும் கொக்கி பழுதானதால், நள்ளிரவில், சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி புறநகர் ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டு, பயணியர் நான்கு மணி நேரமாக பரிதவித்தனர்.

சென்னை சென்ட்ரல், சென்னை கடற்கரையில் இருந்து, கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் தினமும், 80 புறநகர் ரயில்கள், வடமாநிலங்களுக்கு சென்று வரும், 50 - 60 விரைவு ரயில்கள், 40 - 50 சரக்கு வாகனங்கள் இயக்கப்படுகின்றன. கும்மிடிப்பூண்டி - சென்னை சென்ட்ரல் இடையே பயணிக்கும் புறநகர் ரயில்களில், தினமும், லட்சக்கணக்கான பயணியர், கல்வி, சுகாதாரம், தொழில் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு சென்னை சென்று வருகின்றனர்.

இந்நிலையில், இந்த ரயில் மார்க்கத்தில், தண்டவாளங்களில் விரிசல், உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுவது, சிக்னல் கோளாறு, ரயில் இன்ஜின் பழுது, பெட்டிகள் இணைப்பு துண்டாவது என, பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதால், புறநகர் ரயில்கள் குறித்து நேரத்தில் வந்து செல்வதில்லை. இதனால் பயணியர் உரிய நேரத்தில் பணிகளுக்கு சென்று வர முடியாமல் தவிக்கின்றனர்.

கடந்த அக்., 2ல், மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலின் இணைப்பு கொக்கி உடைந்து, இன்ஜின் பெட்டி தனியாக கழன்றி, சிறிது துாரம் சென்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அக்., 11ல், கவரப்பேட்டையில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது, விரைவு ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், இரண்டு நாட்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கடந்த, அக்.,16ல், பொன்னேரி ரயில் நிலையம் அருகே தண்டாள பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு, ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. அக்.,24ல், அனுப்பம்பட்டு - மீஞ்சூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு, ரயில்கள் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டு, போக்குவரத்து பாதித்தது.

டிச.,21ம் தேதி அத்திப்பட்டு புதுநகர் - எண்ணுார் ரயில் நிலையங்களுக்கு இடையே உயர் அழுத்த மின்ஒயர் அறுந்து தண்டவாளத்தில் விழுந்து, மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

நேற்று முன்தினம் இரவு 9:20 மணிக்கு, சென்னை கடற்கரையில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி புறநகர் ரயில் புறப்பட்டது. இந்த ரயில் இரவு 10:35 மணிக்கு மீஞ்சூர் ரயில் நிலையம் வந்தடைந்து, அங்கிருந்து அனுப்பம்பட்டு நோக்கி பயணிக்கும்போது, திடீரென ரயிலின் மேற்பகுதியில் உள்ள மின்சார கொக்கி பழுதானது.

'பாண்டோகிராப்' எனப்படும் இந்த கொக்கி, தண்டவாளத்திற்கு மேலே பயணிக்கும் உயர் அழுத்த கம்பியில் இருந்து மின்சாரத்தை உள்வாங்கி ரயிலுக்கு அனுப்பி, அதன் இன்ஜினை செயல்பட வைப்பதாகும்.

இந்த கொக்கி பழுதானதால், ரயில் மீஞ்சூர் - அனுப்பம்பட்டு ரயில் நிலையங்களுக்கு இடையே நின்றது. அடுத்தடுத்து வந்த இரண்டு புறநகர் மற்றும் வடமாநிலங்களுக்கு செல்லும் மூன்று விரைவு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. தகவல் அறிந்த ரயில்வே பராமரிப்புத் துறையினர் அங்கு விரைந்தனர். பழுதான மின்கொக்கியை சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டனர்.

நீண்டநேரம் மின்கொக்கி பழுதாகி, நடுவழியில் இருட்டில் நின்றிருந்த ரயிலில் பயணியர், அதிலிருந்து குதித்து நடந்து, அனுப்பம்பட்டு ரயில் நிலையம் சென்றடைந்தனர். அங்கிருந்கு, ஆட்டோ, வேன் உள்ளிட்டவைகளை பிடித்து வீடுகளுக்கு சென்றனர்.

நள்ளிரவு, 12:45 மணிக்கு பழுதான மின்கொக்கி சரி செய்யப்பட்டு, புறநகர் புறப்பட்டது. அதை தொடர்ந்து, மற்ற ரயில்களும் ஒன்றன் பின் ஒன்றாக பயணித்தன. இதுபோன்று தொடர் சம்பவங்களால், சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்க பயணியர் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி தவிக்கின்றனர்.

இதுகுறித்து, ரயில் பயணியர் சங்கத்தின் செயலர் டி.தனுஷ்கோடி கூறியதாவது:

இந்த வழித்தடத்தில் தண்டவாளம், மின்ஒயர்களின் தாங்கும் திறனைவிட, கூடுதலான ரயில்கள் இயக்கப்படுகின்றன. அவற்றின் பராமரிப்பு மோசமாக உள்ளது. இதுவே அடிக்கடி பழுதாவதற்கு காரணம்.

ஒரு தண்டவாளத்தில் பழுது என்றால், இந்த மார்க்கத்தில் முற்றிலும் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. சென்னை கடற்கரை - அத்திப்பட்டு வரை நான்குவழி ரயில் பாதை உள்ளது. அதை முழுமையாக பயன்படுத்துவதில்லை. அத்திப்பட்டு - கும்மிடிப்பூண்டி இடையே நான்குவழி பாதை அமைத்தால் மட்டுமே, இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


சேட்டை செய்த மாணவர்கள்




கும்மிடிப்பூண்டியில் இருந்து, சென்னை சென்ட்ரலுக்கு, நேற்று, காலை 6:15 மணிக்கு புறப்பட்ட புறநகர் ரயில், மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே, 6:35 மணிக்கு சென்றபோது, மர்ம நபர்கள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். ரயில் நிறுத்தப்பட்டது. அங்கு வந்த ரயில்வே போலீசார் மற்றும் ஊழியர்கள், அபாய சங்கலி இழுக்கப்பட்ட பெட்டிக்கு சென்று, விசாரணை நடத்தினர். கல்லுாரி மாணவர்கள் அபாய சங்கிலியை இழுத்துவிட்டு, குதித்து தப்பியது தெரிந்தது. அதையடுத்து ரயில் புறப்பட்டு சென்றது. இதனால், நேற்று காலை, 30 நிமிடங்கள் புறநகர் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.

Advertisement