இடைத்தேர்தலில் போட்டி: முடிவு எடுக்க திணறும் பா.ஜ.,
சென்னை: தி.மு.க.,வை கடுமையாக விமர்சித்து வரும் பா.ஜ., ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடலாமா அல்லது வேண்டாமா என்ற முடிவை எடுக்க முடியாமல் திணறி வருகிறது. இதுதொடர்பாக, டில்லி மேலிடத்திடம் ஆலோசனை கேட்டு, செயல்பட முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:
தி.மு.க., அரசின் தவறுகள், அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டை, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தான் தைரியமாக கூறி வருகிறார்.
சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான விவகாரத்தை கண்டித்து, அண்ணாமலை நடத்திய தொடர் போராட்டங்களை அடுத்து தான், அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. அதற்கு பின்பே, அரசுக்கு எதிராக, அ.தி.மு.க.,வும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இளங்கோவன் மறைவை அடுத்து, அடுத்த மாதம் இடைத்தேர்தல் நடக்கிறது.
தமிழகத்தை பொறுத்தவரை பிரதான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க, இருந்தாலும், பா.ஜ., தான் உண்மையான எதிர்க்கட்சி போல் களத்தில் போராடுகிறது.
எனவே, 'ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும்; இல்லையெனில் பா.ஜ.,வுக்கு தைரியம் கிடையாது என்று தி.மு.க.,வினர் விமர்சிப்பர்' என, கட்சி தொண்டர்கள் கருதுகின்றனர்.
அதேசமயம், 'ஆளுங்கட்சியான தி.மு.க., வாக்காளர்களை கவர அதிக, 'கவனிப்பு' செய்யும்; அதை, பா.ஜ.,வை விட பண பலம், தொண்டர் பலம் அதிகம் உள்ள அ.தி.மு.க.,வே எதிர்கொள்ள அச்சப்படும் சூழலில், பா.ஜ., போட்டியிட வேண்டாம்; அடுத்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் பார்த்து கொள்வோம்' என்று, மூத்த நிர்வாகிகள் பேசி வருகின்றனர்.
இதற்கிடையே, இடைத்தேர்தலில் கட்சியின் முடிவை தெரிந்துகொள்ள மாவட்ட நிர்வாகிகள், மாநில நிர்வாகிகளுடன் பேச்சு நடத்தினர்.
அதற்கு, 'இந்த விவகாரம் தொடர்பாக டில்லி மேலிடத்தின் கவனத்திற்கு எடுத்து சென்று, போட்டியிட சொன்னால் போட்டியிடுவோம்; இல்லை என்றால் வேண்டாம்' என, மாநில நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
மேலிடத்திடம் கேட்டு, அதன் முடிவு தெரிந்ததும், விரைவில் பா.ஜ.,வின் நிலைப்பாடு என்ன என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.