காளையின் கொம்பில் ‛ரப்பர் குழாய் கட்டாயம் திடலில் இரட்டை வேலி தடுப்பு அவசியம் நிபந்தனை அதிகரிப்பு 

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு மஞ்சுவிரட்டில் காளை கொம்பில் 'ரப்பர் குழாய்' மற்றும் திடலில் 'இரட்டை வேலி தடுப்பு' அமைக்க வேண்டும் என ஜல்லிக்கட்டு விழாக்குழுவினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட அளவில் ஒவ்வொரு ஆண்டும் ஜன., முதல் மே வரை கலெக்டரால் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி வழங்கப்படும். கடந்த ஆண்டு மஞ்சுவிரட்டு 26, வடமாடு மஞ்சுவிரட்டு 16 என 42 போட்டி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொம்பில் 'ரப்பர் குழாய்' அவசியம்



காளைகளுக்கு ஊக்க மருந்தோ, போதை பொருட்களோ வழங்க கூடாது. மிளகாய் பொடி, மூக்குபொடி, சேறு சகதி பூசி அவற்றை வெறுப்பேற்றக்கூடாது. நோய் பாதித்து, மெலிந்த காளைகள் பங்கேற்க கூடாது. காளை வயது 3 முதல் 15 ஆண்டு, காளையின் கால் முதல் திமில் வரை 120 செ.மீ., உயரத்திற்கு குறைவில்லாமல் இருக்க வேண்டும்.

காளைகளின் கொம்பில் 'ரப்பர் குழாய்' வைக்க வேண்டும். அவற்றின் உடம்பில் எண்ணெய் போன்ற திரவங்கள் பூசக்கூடாது. காளைகளை வீரர்கள் பிடிக்கும் இடத்தில் 8 அடி உயர தடுப்பு, கதவு அவசியம். விழா களத்தில் இருந்து 5 கி.மீ., சுற்றளவில் உள்ள கிணறுகளை மூடியிருக்க வேண்டும். இதை தீயணைப்பு துறையினர் உறுதி செய்ய வேண்டும்.

குடியிருப்பு பகுதியில் இருந்து தொலைவில் இருப்பது அவசியம். மாடு பிடிக்கும் இடம், சுகாதார பரிசோதனை, வாடிவாசலில் விதிமீறல் இல்லாமல் கண்காணிக்க வேண்டும். காளைகளை வாகனத்தில் ஏற்றி வரும்போது கால்நடைத்துறை சான்றுடனும், காளை நிற்க ஏதுவாக 2 ச.மீ., பரப்பளவு இருக்க வேண்டும். காளைகளுக்கு போதிய உணவு, தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மாடுபிடி வீரருக்கானகட்டளை



வீரர்களை மருத்துவ பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்க வேண்டும். போதை பொருள், ஊக்க மருந்து அருந்த கூடாது. ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு களம் போதிய போலீஸ் பாதுகாப்பில் இருக்க வேண்டும். வீரர்களை மட்டுமே காளைகளை அடக்க அனுமதிக்க வேண்டும்.

ஒரே நேரத்தில் 2 அல்லதுஅதற்கு மேற்பட்டவர்களை மாடு பிடிக்க அனுமதிக்க கூடாது. மஞ்சுவிரட்டு பொட்டலில் பொருத்தப்படும் சி.சி.டி.வி., கேமராக்கள் மூலம் விதிமீறல் கண்காணிக்கப்படும். பார்வையாளர்களுக்கு போதிய குடிநீர், கழிப்பிட வசதிகளை செய்துதர வேண்டும்.

காளைகள் நின்று விளையாட வாடிவாசல் முன் 50 சதுர மீட்டர் இடமும், 15 மீட்டர் துாரத்திற்கு தென்னை நார் கழிவும் கொட்ட வேண்டும். காளையின் திமிலை பிடித்து கொண்டு 15 மீட்டர் துாரம் அல்லது 30 வினாடிகள், 3 முறை காளைகள் துள்ளும்போது அவற்றை தழுவியிருந்தால் மட்டுமே போதும். கால், வால் மற்றும் கொம்பை பிடித்து அக்காளையை செயல்பட விடாமல் முடக்க கூடாது.

'இரட்டை வேலி தடுப்பு' அவசியம்



பொட்டலில் 'இரட்டை வேலி தடுப்பு' அமைக்க வேண்டும். மாடுகள், மாடு பிடி வீரர்களுக்கு டோக்கன்வழங்க, எக்காரணம் கொண்டும் பணம் வசூலிக்க கூடாது. வடமாடு மஞ்சுவிரட்டில் பங்கேற்கும் காளைகள் குறைந்தது 3 முதல் 4 வயது வரை மற்றும் போதிய திமில், சரியான உடல் எடை இருக்க வேண்டும். கலப்பின காளைகளுக்கு அனுமதி கிடையாது என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement