பத்திரப்பதிவு அலுவலகங்களில் அடிப்படை வசதிகள் இல்லாது தவிப்பு
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லாததால் மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகி்றனர்.
மாவட்டத்தில் விருதுநகரில் மாவட்ட பதிவாளர் அலுவலகமும், அருப்புக்கோட்டை, ராஜபாளையம், சாத்துார், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்துார் ஆகிய 15க்கும் மேற்பட்ட இடங்களில் துணை பதிவாளர் பத்திரப்பதிவு அலுவலகங்களும் உள்ளன.
இவற்றில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் அங்கு வரும் மக்கள் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர். ஊரகப்பகுதிகளில் உள்ள அலுவலகங்களில் எவ்வித வசதியும் இல்லை.
நகர்ப்பகுதிகளில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் சுகாதார வளாகம் இருந்தாலும் அவை பூட்டியே கிடக்கின்றன. செயல்படுபவையும் முறையாக துாசி படிந்து, துர்நாற்றம் வீசுகின்றன. இதனால் முதியவர்கள் அவசரத்திற்கு கூட ஒதுங்க முடியாது அவதிப்படுகின்றனர்.
பல கழிப்பறைகள் அலுவல் பொருட்கள், பழைய சேர்களை வைக்குமிடமாகவும் உள்ளன.
மக்கள் அமர்வதற்கும் போதிய இருக்கை வசதிகள் இல்லை. வெளியில் வளாகத்தில் காத்திருக்கும் இடங்களில் இருக்கை வசதிகள் இல்லாமல் வெறும் கூரை மட்டும் அமைக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள கல் பெஞ்சுகளில் சிலர் காத்திருக்கின்றனர்.
விருதுநகர் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் கூரை சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. வளாகங்கள் சுத்தமாக இருப்பது கிடையாது. குப்பை கிடப்பதால் பெரும் சுகாதார கேடு ஏற்படுகிறது.
டோக்கன் முறைப்படி தான் பத்திரப்பதிவுக்கு அழைப்பு விடுக்கப்படும் சூழலில் சிலர் முறைகேடாக பலரை முந்தி சென்று பத்திரப்பதிவு செய்கின்றனர்.
இதனால் நேர்மையாக டோக்கன் வாங்கியவர்கள் அன்று மாலை வரை காத்திருந்து பதிய முடியாமல் மீண்டும் மறுநாள் வர வேண்டிய அபாய சூழல் உள்ளது. கட்சிக்காரர்கள் என்றால் தனி பாகுபாடு காட்டப்படுகிறது.
அரசுக்கு டாஸ்மாக்குக்கு அடுத்தப்படியாக அதிகளவில் வருவாய் தரும் இந்த துறையின் அலுவலகங்கள் இந்த நிலையில் இருப்பது மக்களுக்கு மிகுந்த வேதனை அளிக்கும் வகையில் உள்ளது.