முதல்வர் போல மரியாதை; சர்ச்சையில் சிக்கிய ரேவந்த் ரெட்டியின் சகோதரர்; எதிர்க்கட்சிகள் கண்டனம்

ஹைதராபாத்: பள்ளி நிகழ்ச்சிக்கு முதல்வருக்கு வழங்கப்படும் மரியாதையுடன் சென்ற முதல்வர் ரேவந்த் ரெட்டியின் சகோதரரால் தெலங்கானா அரசு சர்ச்சையில் சிக்கியுள்ளது.


விகராபாத் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றின் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் சகோதரர் திருப்பதி ரெட்டி சென்றிருந்தார். அவருக்கு முதல்வரை போன்று நீண்ட போலீஸ் கான்வாய் பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது. மேலும், பள்ளியின் சார்பில் மேல தாளங்களுடன், மாணவர் மினி பாரேட் நடத்தி மரியாதை கொடுத்தனர்.


இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், பாரத் ராஷ்டிரிய சமிதி (பி.ஆர்.எஸ்.,) மற்றும் பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.


இது குறித்து பி.ஆர்.எஸ்., நிர்வாகி கே.டி.ராமாராவ் கூறியதாவது: தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு, முதல்வர்களின் ஆதிக்கம் இருந்து வருகிறது. தேர்வு செய்யப்பட்டது ஒரு முதல்வராக இருந்தாலும், அரை டஜன் முதல்வர்கள் இருக்கின்றனர். விகராபாத் முதல்வர் திருப்பதி ரெட்டிக்கு என்னுடைய வாழ்த்துக்கள், எனக் கூறியிருந்தார்.


அதேபோல, தமிழக பா.ஜ., செய்தித் தொடர்பாளர் என்.வி., சுபாஷ் கூறுகையில், "எம்.பி., எம்.எல்.ஏ., கூட இல்லாத திருப்பதி ரெட்டிக்கு போலீஸ் கான்வாய் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்தப் பள்ளி நிகழ்ச்சியின் போது, விகராபாத் மாவட்ட கலெக்டர் 'தனி பாதுகாவலர்' போல செயல்பட்டுள்ளார்", எனக் கூறினார்.

Advertisement