ஈரோடு கிழக்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் அறிவிப்பு!
சென்னை; ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க., வேட்பாளராக சந்திரகுமார் அறிவிக்கப்பட்டு உள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி காங். எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அண்மையில் காலமானார். அவரது மறைவை அடுத்து அத்தொகுதியை காலியானதாக அறிவித்த தேர்தல் ஆணையம், வரும் பிப்., 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
ஜன. 10ம் தேதி முதல் ஜன.17 வரை வேட்பு மனுத் தாக்கல் செய்யலாம். ஜன.18ல் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். ஜன.20ம் தேதி வேட்பு மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாளாகும்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இண்டி கூட்டணி சார்பில் தி.மு.க., போட்டியிடும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நேற்று (ஜன.10) அறிவித்தது. இதையடுத்து தி.மு.க., வேட்பாளர் யார் என்பது பற்றிய எதிர்பார்ப்பு எழுந்தது.
இந் நிலையில் வேட்பாளராக வி.சி. சந்திரகுமாரை தி.மு.க., தலைமை இன்று(ஜன.11) அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை கட்சியின் தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
இவர் தி.மு.க,.வின் கொள்கை பரப்பு இணைச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவர், தே.மு.தி.க.,வில் இருந்து தி.மு.க.,வில் இணைந்தவர். ஒரு காலத்தில் விஜயகாந்தின் நம்பிக்கையை பெற்றவராக இருந்த சந்திரகுமார், பின்னர் தி.மு.க.,வில் இணைந்தவர்.
2011ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்தவர். வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டதை அடுத்து, தி.மு.க.,வினர் உற்சாகம் அடைந்துள்ளனர். இன்றும், நாளையும் வேட்புமனு தாக்கல் இல்லை என்பதால் அனேகமாக ஜன.13ம் தேதியன்று சந்திரகுமார் மனுத்தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பயோ-டேட்டா
தொகுதி: ஈரோடு கிழக்கு
பெயர்: வி.சி.சந்திரகுமார்,57.
கல்வித்தகுதி: எம்.ஏ., (பொது நிர்வாகம்)
சொந்த ஊர்: ஈரோடு
மனைவி: வி.சி.அமுதா (இல்லத்தரசி)
மகள்கள்: ருசிதாஸ்ரீ (பி.டி.எஸ்.,), மகன் மெகர்வின்ஸ்ரீ (எல்.எல்.பி., இறுதியாண்டு)
தொழில்: ஜவுளி வியாபாரம்
ஜாதி: முதலியார்
கட்சி பொறுப்புகள்
* 1987 - தி.மு.க., வார்டு பிரதிநிதி
* விஜயகாந்த் ரசிகர் மன்ற மாவட்ட தலைவர்
*தே.மு.தி.க., மாநில கொள்கை பரப்பு செயலாளர்
* 2011 - பிரிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதி முதல் எம்.எல்.ஏ., (தே.மு.தி.க.,)
*2016 - ஈரோடு கிழக்கில் அ.தி.மு.க., வேட்பாளர் தென்னரசுவிடம் தோல்வி
* 2016 - தி.மு.க., கொள்கை பரப்பு அணி மாநில இணை செயலாளர்
*ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி, 2 019ல் சேலம் லோக்சபா தேர்தல், 2021ல் குமாரபாளையம் சட்டசபை தொகுதி, 2023 லோக்சபா தேர்தலில் திருச்செங்கோடு சட்டசபை தொகுதி பொறுப்பாளர்.