பணிகள் முடித்தும் பணம் கிடைக்காமல் தவிப்பு
அருப்புக்கோட்டை : ஊராட்சிகளில் வறட்சி நிவாரண பணிகளை செய்து விட்டு பல மாதங்களாக பணம் பெற முடியாமல் ஒப்பந்தக்காரர்கள் அலைந்து வருவதை ஊராட்சி ஒன்றியம், வருவாய் துறை வேடிக்கை பார்க்கிறது.
மாநில அரசு அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்கும் வறட்சி நிவாரண நிதி வழங்குகிறது.
இதில் முக்கிய பணியாக குடிநீர் பணிகளை செய்ய முக்கியதுவம் வழங்கப்படுகிறது. இதற்கான நிதி உடனடியாக வழங்கப்படும். ஒப்பந்ததாரர்கள் பணிகளை செய்து முடித்தவுடன் அவர்களுக்கான பில் தொகை உடனடியாக வழங்கப்படும்.
ஆனால் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் வறட்சி நிவாரண திட்டத்தின் கீழ் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் பணிகள் அவசர கதியில் செய்யப்பட்டன.
பணிகள் முடிந்து 6 மாதங்களுக்கு மேல் ஆகியும் ஒப்பந்தரகாரர்களுக்கு பில் தொகை வழங்கப்படவில்லை. இதனால் ஒப்பந்ததாரர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு நடையாய் நடந்து வருகின்றனர். தீபாவளிபண்டிகைக்கு பணம் வழங்கப்படும் என கூறப்பட்டு வந்த நிலையில், பண்டிகை முடிந்து 2 மாதங்களுக்கு மேலாகியும் பணம் பெற முடியாமல் ஒப்பந்ததாரர்கள் திணறி வருகின்றனர்.
தளவாடப் பொருட்கள் வாங்கிய கடைக்காரர்களுக்கு பணத்தை கொடுக்க முடியாமல் ஓடி ஒளிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக புலம்புகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வேண்டிய பில் தொகையை உடனடியாக பாஸ் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.