'சீமானின் பேச்சு அவரது அரசியலுக்கு எதிராக முடியும்' * திருமாவளவன் கருத்து
அவனியாபுரம்,: ''ஈ.வெ.ரா., குறித்த சீமானின் பேச்சு அவரது அரசியலுக்கு எதிராக போய் முடியும்'' என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
மதுரை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது:
மதுரை மாவட்டம் மேலுார் பகுதியில் டங்ஸ்டன் சுரங்க பிரச்னை சம்பந்தமாக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்து இத்திட்டத்தை கைவிடக்கோரி மனு அளித்துள்ளோம். உயர் கல்வி அனைத்தையும், மத்திய அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரக்கூடிய விதிகளை கொண்டு வந்துள்ளது. துணைவேந்தர், பேராசிரியர்கள் நியமனம் போன்றவற்றில் மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்ற நிலையை ஏற்படுத்தி உள்ளது.
சமீபகாலமாக ஈ.வெ.ரா., மீது ஆதாரம் இல்லாத அவதுாறு பரப்பப்பட்டு வருகிறது. சங் பரிவார் கும்பல் இந்தச் சதி வேலையை செய்து வரும் சூழலில் மொழி, இனத்தின் பெயரால் அரசியல் செய்யும் அமைப்புகளும் ஈ.வெ.ரா.,வை குறி வைப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
எல்லை மீறும் சீமான்
சீமானின் பேச்சு நாகரீகத்தின் எல்லையை மீறி உள்ளது. அவரது குதர்க்கமான இந்த பேச்சு அவரது அரசியலுக்கு எதிராக போய் முடியும். தமிழுக்காக, தமிழர்களுக்காக, தமிழத்திற்காக இறுதி மூச்சு வரை பணியாற்றிய ஈ.வெ.ரா.,வை கொச்சைப்படுத்துவது ஏற்புடையது அல்ல என்றார்.
தனிச்சட்டம்
மேலுாரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அரிட்டாபட்டி, வல்லாளப்பட்டி பகுதிகளில் டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் திருமாவளவன் தலைமை வகித்து பேசியதாவது: மத்திய அரசு இத்திட்டத்தை கைவிட வேண்டும். தமிழக அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும். தமிழக அரசு இப்பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். அரிட்டாபட்டியில் 2 ஆயிரத்து 300 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு, குடைவரை கோயில், சமண, கல் படுக்கைகள், தமிழ் வட்டெழுத்து, மகாவீரர் சிற்பங்கள் உள்ளன. பாதுகாக்கப்பட வேண்டிய பல்லுயிர்களும் உள்ளன.
பா.ஜ., உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.