'காற்றோடு பட்டம் போல' கவிஞர் சாரதி
'மூன்றாம் பிறை' படத்தில்,'கண்ணே கலைமானே...', பாடலில் 'உனக்கே உயிரானேன்.., எந்நாளும் எனை நீ மறவாதே...' வரிகளில் படத்தின் ஒட்டுமொத்த கதைக் கருவையும் நிலைநிறுத்தியவர் கவிஞர் கண்ணதாசன். 'அயோத்தி' படத்தில் 'காற்றோடு பட்டம் போல இந்த வாழ்க்கைதான்...,' பாடலில் 'ஒரு தெய்வம் பார்க்க வந்து ஒரு தெய்வம் போச்சு இன்று..,' வரிகளில் படத்தின் கதைக்கருவை உள்ளடக்கமாக்கிய வித்தகர் இவர். அதே படத்தின் இறுதிக் காட்சியில், 'நல்லவர்கள் கூடும்போது நன்மைகளும் கூடி போகும்..., அன்புதான் பாலம் ஆகுமே...,' பாடலால் கண்ணீர் சிந்த வைத்தவர் கவிஞர் சாரதி.
தஞ்சாவூர் மாவட்டம் நாயக்கன்கோட்டையில் பிறந்தவர். 70 படங்களில் 100 பாடல்களை எழுதியுள்ளார். 'காசு கொடுக்கும் யானைகள்' என்ற கவிதை தொகுப்பை வெளியிட்டுள்ளார்.
'கொடாப்பு' என்ற கவிதை தொகுப்பு விரைவில் வெளியாக உள்ளது. சாரதி கூறியதாவது:
தந்தை நாளிதழ் வினியோகிக்கும் தொழில் செய்கிறார். பிளஸ் 2 படித்துள்ளேன். சினிமா ஆர்வத்தில் சென்னையில் கவிஞர் காளிதாசனிடம் உதவியாளராக சேர்ந்தேன். நட்புக்காக படத்தில் அவர் எழுதிய 'மீசக்கார நண்பா...,' பாடலை முதன் முதலில் நகலெடுத்து கொடுத்தேன். மெட்டுக்கு பாடல் எழுதுவது எப்படி, எத்தகைய புத்தகங்களை படிப்பது என பயிற்சி அளித்தார். 'கால்வாயை கடக்க வரவில்லை; கடலுக்குள் கால் வைக்க வந்துவிட்டோம்,' என சினிமாவை பற்றி புரிந்து கொண்டேன்.
பூபதி பாண்டியன் இயக்கத்தில், யுவன்சங்கர் ராஜா இசையில் 2010ல் 'காதல் சொல்ல வந்தேன்' படம் வெளியானது. அதில் நான் முதன்முதலில் எழுதிய 'ஓசலா' பாடல் கல்லுாரி மாணவர்களில் காதல் கீதமாக கருதப்பட்டது. விஷாலின் 'பட்டத்து யானை'யில் 'ராஜா ராஜா நான்தானே,' பாடல் என்னை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தது.
சமுத்திரக்கனியின், 'புத்தனின் சிரிப்பு,' படத்தில், 'ஹரி ஹரி..., மனம் ஒரு தீப்பொறி..., புயலிலும் பூப்பறி..., 'பாடலில் 'தங்கத்தில் கிண்ணம் செய்து சிங்கத்தின் பாலைக் கற, சாதித்த பின்னே போதிக்க பள்ளிதிற,' என தத்துவ வரியை வைத்தேன். தங்கமுலாம் பூசிய பாத்திரத்தில் சிங்கத்தின் பாலை இருப்பு வைத்தால்தான் திரவ நிலையில் இருக்கும். மற்ற பாத்திரத்தில் இருந்தால் பனிக்கட்டிபோல் மாறிவிடும். ஒரு மனிதன் தகுதியுடன் உரிய இடத்தை அடைய முயற்சிக்க வேண்டும் என்பதை குறிக்கும் அந்த வரிகளை சில இயக்குனர்கள் பாராட்டினர்.
'அயோத்தி' பட கதையை இயக்குனர் மந்திரமூர்த்தி கூறினார். 'காற்றோடு பட்டம் போல' பாடலை மனைவியை இழந்த கணவன் பாடுவதுபோல் சூழல். அப்போது எனது குடும்பத்தினரை தஞ்சாவூரில் ஒரு புதுமனை புகுவிழாவிற்காக சென்னையிலிருந்து பஸ்சில் அனுப்பி வைத்தேன். 'ரீல் லைப்' (சினிமா கற்பனை வாழ்க்கை), 'ரியல் லைப்'பை (நிஜ வாழ்க்கையை) தொடர்புபடுத்தி பார்த்தேன். குடும்பத்தினர் ஊருக்குச் செல்லும் நிலையில் எழுத வேண்டாம் என ஒத்திவைத்தேன். ஊருக்கு சென்றடைந்ததை உறுதி செய்தபின்தான் மறுநாள் பல்லவியை எழுதினேன். இசையமைப்பாளர் ரகுநந்தனின் மெட்டு, வார்த்தைகளை இலகுவாக எழுத உத்வேகம் அளித்தது.
'பிள்ளையார் சுழி' படம் பிப்ரவரியில் வெளியாகிறது. ஆட்டிசம் பாதித்த குழந்தை குறித்து 'கடவுள் பரிசாய் கையில் கிடைத்தாய் மகனே' என தாய் அன்பை பேசும் பாடல் எழுதியுள்ளேன். ரகுநந்தன் இசையில் 'லாக்டவுன்' படம் மார்ச்சில் வெளியாகும். அதில் 'அழகான ராணியே,' மற்றும் 'கனா கலைந்து போனதே,' பாடல்கள் எழுதியுள்ளேன். எனது பாடலில் மொழிச் சிதைவை நான் அனுமதிப்பதில்லை. கதைச் சூழல், இயக்குனரின் விருப்பத்திற்கேற்ப ஆங்கிலத்தை பயன்படுத்துகிறேன் என்றார்.
மேலும் பேச 90439 41348