ஜெய் ஷா இருந்த இடத்தில் தேவஜித்! பி.சி.சி.ஐ. புதிய செயலாளர் நியமனம்
மும்பை: இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய செயலாளராக மாஜி கிரிக்கெட் வீரர் தேவஜித் சைகியா நியமிக்கப்பட்டு உள்ளார்.
இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ., செயலாளராக பதவி வகித்து வந்த ஜெய் ஷா, ஐ.சி.சி., தலைவர் ஆனார். அதன் பின்னர், அந்த பதவிக்கு இடைக்கால செயலாளராக தேவஜித் சைகியா செயல்பட்டு வந்தார்.
இந் நிலையில், பி.சி.சி.ஐ.,யின் சிறப்பு பொதுக்கூட்டம் இன்று (ஜன.12) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேவஜித் சைகியா செயலாளராகவும், பொருளாளராக பிரபதேஜ் சிங் பாட்டியாவும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இந்த பதவிகளுக்கு இவர்கள் இருவரை தவிர வேறு யாரும் போட்டியிடவில்லை.
தற்போது புதிய செயலாளராக தேர்வு செய்யப்பட்டு உள்ள தேவஜித் சைகியா, அஸ்ஸாம் மாநிலத்தின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆவார். கர்னல் சி.கே. நாயுடு டிராபி, ரஞ்சி டிராபி ஆகியவற்றில் விளையாடியவர். 1990-91ம் ஆண்டுகளில் 4 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றவர்.
மாஜி கேப்டன் கங்குலியுடன் கிழக்கு மண்டலத்திற்காக விளையாடி இருக்கிறார். அஸ்ஸாம் கிரிக்கெட் சங்க செயலாளராகவும், கவுகாத்தி விளையாட்டு சங்க பொதுச் செயலாளராகவும் பணியாற்றியவர். அஸ்ஸாம் மாநிலத்தில் முதல் முறையாக மாவட்டங்களுக்கு இடையேயான பெண்கள் கிரிக்கெட் போட்டியை நடத்தியதில் பெரும் பங்காற்றியவர்.