கபில்தேவ் தலையில் துப்பாக்கியால் சுட நினைத்தேன்: முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் தந்தை பகீர்
சண்டிகர்: கிரிக்கெட் உலகக் கோப்பையை 1983ல் இந்தியாவுக்கு பெற்றுத் தந்தஅணி முன்னாள் கேப்டன் கபில்தேவை, துப்பாக்கியால் சுட விரும்பினேன்,'' என இந்திய அணி முன்னாள் வீரர் யுவராஜின் தந்தை யோக்ராஜ் சிங் கூறியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங். இவரும் இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாடி உள்ளார். ஒரு டெஸ்ட் போட்டி, ஆறு ஒரு நாள் போட்டிகளில் அவர் விளையாடி உள்ளார்.
இந்நிலையில் யோக்ராஜ் சிங் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது;
கபில் தேவ் இந்திய அணி, வடக்கு மண்டலம் மற்றும் ஹரியானா அணி கேப்டனாக இருந்த போது எந்த காரணமும் இல்லாமல் என்னை அணியில் இருந்து நீக்கினார். இது தொடர்பாக கபில்தேவிடம் எனது மனைவி பல கேள்விகளை கேட்க விரும்பினார். ஆனால், அந்த நபருக்கு பாடம் கற்பிப்பேன் என அவரிடம் கூறினேன்.
இதற்காக எனது பிஸ்டலை எடுத்துக்கொண்டு அவரது வீட்டிற்கு சென்றேன். அப்போது, கபில்தேவ் தாயாருடன் வெளியே வந்தார். அவரை பல முறை விமர்சித்ததுடன், உங்களைால் எனது நண்பர் ஒருவரை இழந்தேன். இன்று நீங்கள் செய்ததற்கான பலனை நீங்கள் அனுபவிக்க வேண்டும் எனக்கூறினேன். உங்கள் தலையில், சுட வேண்டும் என விரும்பி இங்கு வந்தேன். ஆனால், உங்கள் அருகில் பக்திமிக்க தாயார் இருப்பதால் அதனை செய்யவில்லை என்றேன்.
அந்த தருணத்தில் தான் இனிமேல் நான் கிரிக்கெட் விளையாடக்கூடாது. யுவராஜ் கிரிக்கெட் விளையாட வேண்டும் என முடிவெடுத்தேன். 2011ல் இந்திய அணி உலகக் கோப்பை வென்ற போது, கபில்தேவ் மட்டுமே கண்ணீர் வடித்தார். அவரிடம் ஒரு நாளிதழ் செய்தியை அனுப்பி, உலகக்கோப்பை கிரிக்கெட்டில் உங்களை விட எனது மகன் சாதித்துவிட்டான் என்கூறியிருந்தேன்.
வாட்ஸ்அப் செயலி மூலம் கபில்தேவ் எனக்கு ஒரு செய்தி அனுப்பி இருந்தார். அதில்' அடுத்த பிறவியில் நாம் சகோதரராக பிறப்போம். ஒரே தாயாருக்கு குழந்தைகளாக பிறக்க வேண்டும்' எனக்கூறியிருந்தார். என்னை சந்திக்க வேண்டும் என விரும்பியிருந்தார். ஆனால் பழைய பகை இருந்ததால், அது தடையாக உள்ளது.
பிஷன் சிங் பேடி
முன்னாள் கிரிக்கெட் வீரர் பிஷன்சிங் பேடி உள்ளிட்டோர், எனக்கு எதிராக சதி செய்தனர். அவரை நான் மன்னிக்கவே மாட்டேன். அவர் படுக்கையிலேயே உயிரிழந்துவிட்டார். நான் அணியில் இருந்து நீக்கப்பட்டபோது, தேர்வாளர்களில் ஒருவரிடம் பேசினேன். அதற்கு அவர், 'நான் மும்பை அணிக்காக விளையாடியதால் கவாஸ்கருக்கு வேண்டப்பட்டவராக இருப்பேன். அதனால், பிஷன் சிங் பேடி என்னை தேர்வு செய்ய விரும்பவில்லை' என்றார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.