பாகிஸ்தானில் சிந்து நதியில் புதைந்து கிடக்கும் தங்கம்?: தோண்டியெடுக்க குவிந்த மக்கள்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் சிந்து நதியில் ஏராளமான தங்கம் புதைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அது அந்நாட்டு பண மதிப்பில் 60 ஆயிரம் கோடி இருக்கும் என கணக்கிடப்பட்டு உள்ளது. இதையறிந்த அப்பகுதி மக்கள் தங்கத்தைதோண்டும் பணியில் சட்டவிரோதமாக ஈடுபட்டனர். அங்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
உலகின் மிகப்பழமையான மற்றும் நீண்ட நதிகளில் ஒன்றாக சிந்து நதி உள்ளது. சிந்து சமவெளி நாகரிகம் கி.மு., 3,300 மற்றும் 1,300க்கு இடையே அதன் கரையோரங்களில் செழித்து வளர்ந்தது. நாடு பிரிவினைக்கு முன்னர் இந்த நதி இந்தியாவிற்கு சொந்தமானதாக இருந்தது. தற்போது, அந்த நதி இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் சொந்தமானதாக உள்ளது. நதிநீர் பங்கீடு தொடர்பாக ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் உள்ளது.
இந்நிலையில், இந்த நதியில், முக்கியமாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் அருகே அட்டோக் பகுதியில் 32 கி.மீ., அகலத்துக்கு 32.6 மெட்ரிக் டன் தங்கம் புதைந்து புதைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது. இந்த தங்கத்தின் மதிப்பு, அந்நாட்டு பண மதிப்பில் 60 ஆயிரம் கோடி இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்த பணம், அப்பகுதிக்கு பொருளாதார பலன்களை அளிப்பதுடன், நிதிநெருக்கடியில் சிக்கி உள்ள பாகிஸ்தானின் பொருளாதாரத்திற்கும் உதவியாக இருக்கும்.
பாகிஸ்தானின் வடபகுதியில் உள்ள மலைப்பகுதியில் இருந்து இந்த தங்கம் வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு, டெக்டோனிக் பிளேட்கள் மோதி மலை உருவான போது அப்போது ஏற்பட்ட அரிப்பு காரணமாக தங்க துகள்கள் சிந்து நதியில் கலந்து அடித்து வரப்பட்டு இருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
மக்கள் படையெடுப்பு
இது குறித்து தகவல் அறிந்த மக்கள் சிந்து நதி பகுதிக்கு படையெடுக்க துவங்கினர். குறிப்பாக குளிர்காலத்தில் நதியில் தண்ணீர் மட்டம் குறைவாக இருக்கும் என்பதால், ஏராளமானோர் கனரக இயந்திரங்களை கொண்டு தோண்டி தங்கத்தை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். இது சட்டவிரோதம் என்பதால், அங்கு பிரச்னை ஏதும் ஏற்படாமல் இருப்பதற்காக அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
அதிகாரிகள் அலட்சியம்
இங்கு தங்கம் இருப்பதற்கான சாத்தியம் அதிகம் உள்ளதாக கூறப்பட்டாலும், கனிம வளத்துறையினர் அதில் கவனம் செலுத்தவில்லை எனவும், இங்கு மணல் மற்றும் ஜிங்க் சுரங்கம் அமைப்பதற்கான பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், தங்கம் குறித்த ஆய்வுக்கு முட்டுக்கட்டை போடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.