உலகின் சிறந்த சுற்றுலா தலங்கள்: அசாம் மாநிலத்துக்கு இடம்!
நியூயார்க்: நியூயார்க் டைம்ஸின் 2025ம் ஆண்டிற்கான சிறந்த சுற்றுலா தலங்களின் பட்டியலில் அசாம் மாநிலம் 4வது இடத்தைப் பிடித்துள்ளது.
அசாம் சந்தேகத்திற்கு இடமின்றி இந்தியாவின் மிகவும் வியந்து பார்க்கக்கூடிய இடங்களில் ஒன்றாகும். அதன் இயற்கை அழகு, வளமான கலாசாரம் மற்றும் பசுமையான தேயிலைத் தோட்டங்களுடன், இது ஒரு தனித்துவமான இடமாகும். பார்வையாளர்கள் மறக்க முடியாத அனுபவத்தைப் பெறுவது உறுதி.
உலகின் முன்னணி நாளிதழ்களில் ஒன்றான நியூயார்க் டைம்ஸ், சர்வதேச அளவில் 2025ல் செல்ல வேண்டிய 52 சுற்றுலா மையங்கள் என்ற பட்டியலை வெளியிட்டது. இதில், அசாம் மாநிலத்துக்கு நான்காமிடம் தரப்பட்டுள்ளது.
அசாமை விவரிக்கும் நியூயார்க் டைம்ஸ்:
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கான நுழைவாயில் என்று கருதப்படும் அசாம் மாநிலம், மியான்மர் மற்றும் வங்கதேசம் அருகே அமைந்துள்ளது. கலாசார முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநிலம், இந்தியாவின் பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் கூட்ட நெரிசல் குறைவானது.
இங்குள்ள அசாம் பிரமிடுகள் அல்லது சரைதேவ் மொய்தம், யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னோர் உடல் அடக்கம் செய்யப்பட்ட இந்த பிரமிடுகள், ஆஹோம் ஆட்சியாளர்களால் 13ம் நுாற்றாண்டுக்கு பிறகு கட்டப்பட்டவை.
இங்குள்ள காஸிரங்கா தேசிய பூங்காவில், ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்களை காண முடியும். அசாம், அதன் வரலாற்றுப் பொக்கிஷங்களுக்கு கூடுதலாக முக்கியத்துவம் பெறுகிறது.
இவ்வாறு நியூயார்க் டைம்ஸ் விவரித்துள்ளது.