பார்லியில் ஸ்டாலினுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்: தம்பிதுரை காட்டம்

8

கிருஷ்ணகிரி: டங்ஸ்டன் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக பார்லியில் உரிமை மீறல் நோட்டீஸ் அளிக்க இருப்பதாக அ.தி.மு.க., எம்.பி., தம்பிதுரை கூறி உள்ளார்.



மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் தி.மு.க., அ.தி.மு.க., ஆகிய கட்சிகள் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றன. பார்லியில் கனிமவள மசோதாவுக்கு அ.தி.மு.க., எம்.பி., தம்பிதுரை ஆதரித்து பேசியதாக தி.மு.க.,கூறி வருகிறது.


இதே குற்றச்சாட்டை அண்மையில் நடந்து முடிந்த சட்டசபைக் கூட்டத் தொடரில் அவை உறுப்பினர்கள் முன்னிலையில் முதல்வர் ஸ்டாலினும் முன் வைத்தார். அதற்கு அ.தி.மு.க., கடும் எதிர்ப்பு தெரிவித்தது.


இந்நிலையில் கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க., எம்.பி., தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது;


டங்ஸ்டன் சுரங்க விவகாரம் வர நான் தான் காரணம் என்று சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதை முழுமையாக மறுக்கிறேன். தமிழக சட்டசபையில் உறுப்பினர் அல்லாத என்னை பற்றி பொய்யான குற்றச்சாட்டை முதல்வர் கூறி உள்ளார்.


எனவே, அவர் மீது பார்லியில் உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கி சட்ட நடவடிக்கை எடுப்பேன்.


இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement