குஜராத்தில் இருந்து 14 நாள் பயணம்; மஹா கும்பமேளாவில் பங்கேற்ற மாற்றுத்திறனாளி பக்தர் நெகிழ்ச்சி

1

லக்னோ: குஜராத்தில் இருந்து 14 நாட்கள் பயணம் மேற்கொண்டு, மஹா கும்பமேளா நிகழ்ச்சியில் பங்கேற்ற மாற்றுத்திறனாளி பக்தர் ஸ்ப்ளெண்டர் பாபா அனைவரது கவனத்தையும் ஈர்த்து உள்ளார்.


உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில், மஹா கும்பமேளா என்ற மிகப் பெரும் ஆன்மிகத் திருவிழா நேற்று துவங்கியது. முதல் நாளிலேயே, 1.50 கோடி பக்தர்கள் திரண்டு புனித நீராடினர்.

வரும் பிப்., 26ம் தேதி வரை, 45 நாட்களுக்கு மஹா கும்பமேளா நடக்க உள்ளது. இந்நிலையில் இரண்டாவது நாளான இன்று (ஜன., 14) குஜராத்தில் இருந்து 14 நாட்கள் பயணம் மேற்கொண்டு, மஹா கும்பமேளா நிகழ்ச்சியில் பங்கேற்ற மாற்றுத்திறனாளி பக்தர் ஸ்ப்ளெண்டர் பாபா அனைவரது கவனத்தையும் ஈர்த்து உள்ளார். இவர் போலியோ நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தார்.

இவருக்கு இந்த நோய் சிறு வயதிலிருந்தே உள்ளது. ஆனால் இவர் ஆன்மிகத்தில் அதிகம் நாட்டம் கொண்டவர். மஹாகும்பமேளா நெருங்கியபோது, ​​உடல்ரீதியான பல்வேறு சவால்கள் அவருக்கு ஏற்பட்டன. ஆனாலும் மஹாகும்பமேளா நிகழ்ச்சியில் பங்கேற்பேன் என்று விடாப்பிடியாக இருந்தார்.

அவர், குஜராத்தில் உள்ள தனது ஆசிரமத்திலிருந்து, மூன்று சக்கர வண்டியில் 1,000 கிலோமீட்டர் தூரம் பிரயாக்ராஜுக்குப் பயணம் செய்தார். இவர் பிரயாக்ராஜ் வந்தடைய 14 நாட்கள் ஆகியது. பல்வேறு சவால்களைக் கடந்து இவர் கும்பமேளா நிகழ்ச்சியில் பங்கேற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர் மன உறுதி, பக்தியை ஆன்மிகவாதிகள் பாராட்டியுள்ளனர். சனாதன தர்மத்தின் மீதான நம்பிக்கையை அதிகம் கொண்டவர் பாபா. அவர் கூறியதாவது:


என் பயணம் கடினமாக இருந்தது. ஆனால் ஒவ்வொரு நாளும் விடாமல் பயணம் மேற்கொண்டேன். நான் இங்கு திரிவேணி சங்கமத்தில் புனித நீராட வேண்டும் என்பது இறைவன் விருப்பம். அதைத்தான் நான் நிறைவேற்றி இருக்கிறேன்.


எத்தனை போராட்டங்கள் இருந்தாலும், என் இறை நம்பிக்கை என்னை முன்னோக்கி கொண்டு செல்கிறது. இவ்வாறு அவர் புன்னகையுடன் தெரிவித்தார்.

Advertisement