மின் வாரியத்தில் தொடரும் மறுபணிநிரவல்; பறிபோகும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு
விருதுநகர்: தமிழகத்தில் மின் வாரியத்தில் புதிய துணை மின் நிலையங்களுக்கு புதிய பணியிடங்களை அறிவிக்காமல், பழைய மின் பொறியாளர்கள், அலுவலர்களையே பணிநிரவல் செய்வதால் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பறிபோகும் அபாயம் உள்ளது.
தமிழக மின் வாரியத்தில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஓய்வு பெறுவோர் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய பணியிடங்கள் நிரப்பப்படுவதுமில்லை.
புதிதாக துணை மின் நிலையங்கள் துவங்கப்பட்டாலும், புதிய பணியிடங்கள் அறிவிக்காமல் வேறு இடங்களில் இருந்து பணிநிரவல் மூலம் நிரப்புகின்றனர்.
விருதுநகர் கோட்டூரில் 765 கே.வி., புதிய துணை மின் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒரு செயற்பொறியாளர், 5 உதவி செயற்பொறியாளர்கள், 5 இணை பொறியாளர், ஒரு போர்மேன், லைன் இன்ஸ்பெக்டர்கள் 4, தொழில்நுட்ப உதவியாளர் 8, கள உதவியாளர் 8 என 32 பணியிடங்கள் தேவை. இதில் ஒருவர் கூட புதிதாக நியமிக்கப்படவில்லை.
ஒவ்வொரு புதிய துணை மின் நிலையங்கள் துவங்கும் போதும் இதுதான் நடக்கிறது. இதனால் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிபோகிறது.
மின் பொறியாளர் குழும பொது செயலர் ராஜ்குமார் கூறியதாவது:
பணிநிரவலால் பதவி உயர்வும் பறிக்கப்படும். இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பும் பறிக்கப்படுகிறது. இளைய தலைமுறைக்கு வேலை வழங்குவது அரசின் தார்மீக கடமை. இந்த செயல் அதில் இருந்து நழுவி செல்வது போன்றுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.