கார் பந்தய ஊழல் வழக்கு; வீட்டு காவலில் ராமா ராவ்
ஹைதராபாத் : 'பார்முலா இ' கார் பந்தயத்தில் நடந்த ஊழல் தொடர்பான வழக்கில், பாரத் ராஷ்ட்ர சமிதி செயல் தலைவர் கே.டி.ராமா ராவ் உட்பட அக்கட்சியின் மூத்த தலைவர்கள் ஏழு பேர் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தெலுங்கானா மாநிலத்தில், முந்தைய பி.ஆர்.எஸ்., எனப்படும், பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் ஆட்சியின் போது, 2023, பிப்ரவரியில், 'பார்முலா இ' கார் பந்தயம் ஹைதராபாதில் நடத்தப்பட்டது.
இதில் பல்வேறு நிதி முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி, பந்தயத்தை நடத்திய அப்போதைய அமைச்சரும், முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகனுமான கே.டி.ராமா ராவ் உட்பட அக்கட்சியின் மூத்த தலைவர்கள் மீது மாநில ஊழல் தடுப்பு பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளது.
இதன் அடிப்படையில், பணப்பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ராமா ராவ் தாக்கல் செய்த மனுவை தெலுங்கானா உயர் நீதிமன்றம் சமீபத்தில் தள்ளுபடி செய்தது. இதை தொடர்ந்து, ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் முன், கடந்த 9ம் தேதி ராமா ராவ் ஆஜரானார். அவரிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
வழக்கில் தொடர்புடைய பி.ஆர்.எஸ்., - எம்.எல்.ஏ., பாடி கவுஷிக் ரெட்டி நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.
இதன் தொடர்ச்சியாக, ராமா ராவ், அவரது கட்சியின் மூத்த தலைவர்கள் ஹரீஷ் ராவ், பிரவீன் குமார் உட்பட ஏழு பேர் நேற்று முதல் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.