சும்மா அதிருதில்ல...
சென்னையில் திரும்பிய பக்கமெல்லாம் தாரை தப்பட்டை தப்பு மேள வாத்தியங்கள் முழங்க நம்ம ஊரு திருவிழா களைகட்டிக் கொண்டு இருக்கிறது.
துாத்துக்குடி எம்.பி.,கனிமொழிக்கு நாட்டுப்புற கலைஞர்கள் மீது எப்போதுமே தனிப்பிரியம்,அவர்களை ஒருங்கிணைத்து உரிய மரியாதையும், ஊதியமும் கொடுத்து அவர் நடத்திய சென்னை சங்கமம் நிகழ்ச்சி சென்னை மக்களுக்கு ஒரு மறக்கமுடியாத நிகழ்வாகும்.
அதன்பிறகு ஆட்சி மாற்றம் அப்படி இப்படி என்று சங்கமம் நிகழ்வு நடக்காமலே இருந்தது,நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது சங்கமம் நிகழ்வு நடந்து வருகிறது.
தமிழகத்தில் உள்ள ஒயிலாட்டம்,கரகாட்டம்,காவடியாட்டம் உள்ளீட்ட நாட்டுப்புற கலைஞர்கள் என்ற ஆயிரத்து ஐநுாறு பேர் சென்னையில் குழுமியுள்ளனர்.
இவர்கள் வருகின்ற 18 ம் தேதி வரை சென்னையில் பரவலாக மக்கள் கூடும் பூங்கா போன்ற இடங்களில் தங்களது கலைகளை வெளிப்படுத்துவர்.
விழாவினை முதல்வர் ஸ்டாலின் துவக்கிவைத்தார்,ஏஐ.,தொழில்நுட்பத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி திரையில் தோன்றி கலைஞர்களை வாழ்த்த,ஸ்டாலின் முழவு முரசு கொட்டி விழாவினை துவக்க அடுத்த அரைமணி நேரத்திற்கு அரங்கமே அதிர்ந்தது.
இடைவெளி இல்லாமல் பல்வேறு கலைஞர்கள் வந்து தங்களது திறமையை வெளிப்படுத்திச் சென்றனர்.திருநங்கைகள்,காது கேளாதோர் ஆகியோரது நடனங்களும் இடம் பெற்றது,வள்ளலார் ராப் என்ற ராப் பாடல்களும் பாடப்பட்டது.சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த துவக்கவிழாவின் அதிர்வுகள் இப்போது சென்னை முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.
இந்த கலைஞர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு நாள் ஊதியமாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பை அடுத்து இப்போது அவர்களது அடி அதிரடியாக விழுகிறது,சென்னை சும்மா அதிருது
வாய்ப்பு உள்ளவர்கள் தென்மாவட்ட மக்களின் கலை கலாச்சாரங்களை கண்டு ரசிக்க இது ஒரு நல்ல வாய்ப்பு பயன்படுத்திக் கொள்ளுங்கள்
-எல்.முருகராஜ்