அலங்காநல்லூரில் காளை உரிமையாளர்கள் போராட்டம்; உள்ளூர் காளைகளுக்கு அனுமதி மறுப்பு என புகார்

1

மதுரை: அலங்காநல்லூரில் நாளை ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள நிலையில், வாடிவாசல் முன்பு காளை உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


உலகளவில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுக்களில் ஒன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு. அவனியாபுரம், பாலமேட்டை தொடர்ந்து, நாளை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இதையொட்டி, மாடுபிடி வீரர்களும், காளைகளின் விபரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.


ஆனால், அலங்காநல்லூரைச் சேர்ந்த மக்களின் காளைகளுக்கு, ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க முடியாதபடி, 800 நம்பருக்கு மேற்பட்ட டோக்கன்களை வழங்கியிருப்பதாகக் கூறி, அப்பகுதி மக்கள் வாடிவாசல் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 200 பேருக்கும் மேலாக திரண்டுள்ளதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. மேலும், திட்டமிட்டே தங்களை புறக்கணிப்பதாகவும், சரியான காரணமின்றி தங்களின் காளைகளுக்கு டோக்கன் நிராகரிக்கப்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.


நாளை காலை ஜல்லிக்கட்டு தொடங்க உள்ள நிலையில், அலங்காநல்லூரில் காளைகளின் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது விழாக் குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேலும், போராட்டத்தை கைவிடும்படி அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவர் கூறியதாவது: அலங்காநல்லூர் ஊராட்சி என்பது அலங்காநல்லூர், வலசை, குறவகுளம் ஆகிய 3 கிராமங்களைக் கொண்டது. இந்த 3 கிராமங்களில் மட்டும் 200க்கும் மேற்பட்ட காளைகளை வளர்த்து வருகிறார்கள். இந்த 200 காளைகளும் வருடா வருடம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அவிழ்க்கப்பட்டது. ஆனால், கடந்த 2, 3 ஆண்டுகளாக இந்த மாடுகளை அவிழ்க்கப்பட முடியவில்லை.


அலங்காநல்லூர் மக்களின் காளைகள் இல்லாமலே இங்கு ஜல்லிக்கட்டு நடக்கிறது. 800க்கும் மேற்பட்ட டோக்கன்களை கொடுத்து, எங்க காளைகளை அவிழ்க்க முடியாதபடி சூழ்ச்சி நடக்கிறது. யாரையோ குளிர்விக்க இப்படி பண்றாங்க. இங்கு போராட்டம் நடத்துவது உள்ளூர் மக்கள் தான். அதேபோல, மரியாதை மாடுகளை முறைப்படி பெயர் சொல்லி அறிவிக்கப்படுவதில்லை.


இப்ப கொடுத்திருக்கும் டோக்கன் எல்லாமே, 800 நம்பருக்கு மேல் தான். அதாவது, 4 முதல் 5 மணிக்கு தான் அவிழ்க்க முடியும். அதுவும் வாய்ப்பு கிடைத்தால் தான். ஒன்னு, ரெண்டு மாடுகளுக்கு இல்ல. 200 மாடுகளில் 180 மாடுகளுக்கு 800 நம்பருக்கு மேல் தான் டோக்கன் விழுந்திருக்கு.


30, 40 மாடுகளுக்கு டோக்கன் கொடுக்கல. அவங்க மேல் இருக்கும் கோளாறுகளை காரணம் காட்டி, காளைகளுக்கு டோக்கன் வழங்கப்படவில்லை. அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும் எங்களை புறக்கணித்து தான், இந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை நடத்துகின்றனர். கிராமத்தில் உள்ள மரியாதை மாடுகளை முறையாக அவிழ்க்க வேண்டும். எங்களின் கிராமத்து மாடுகளை அவிழ்த்து விட அனுமதிக்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement