டில்லியில் ஆம் ஆத்மிக்கு சமாஜ்வாதி, திரிணமுல் ஆதரவு: காங்கிரஸ் பதில் என்ன?
புதுடில்லி: '' இண்டியா கூட்டணி உருவாக்கப்பட்ட போதே , பா.ஜ.,வை தோற்கடிக்கும் திறன் கொண்ட, வலுவாக உள்ள கட்சிகளுக்கே ஆதரவு அளிக்க வேண்டும் என ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஒன்று என சமாஜ்வாதி மற்றும் திரிணமுல் காங்கிரஸ் கூறியுள்ளது.
லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு மாற்றாக எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து ' இண்டியா' கூட்டணியை உருவாக்கின. ஆனால், அக்கூட்டணியால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. தேர்தல் முடிந்த பின் கூட்டணி கட்சிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. குறிப்பாக ஹரியானா மற்றும் மஹாராஷ்டிரா தேர்தலுக்கு பின் காங்கிரசை கூட்டணி கட்சிகள் விமர்சனம் செய்ய துவங்கின.
டில்லியில் பிப்.,5ல் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், 'இண்டியா' கூட்டணியில் உள்ள காங்கிரசும், ஆம் ஆத்மியும் தனித்தனியே போட்டியிடுகின்றன. இதில், கெஜ்ரிவாலை காங்கிரஸ் கட்சியின் அஜய் மக்கன் கடுமையாக விமர்சித்தார். இதனால் கோபம் அடைந்த ஆம் ஆத்மி, இதற்கு அக்கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால், தலைமைப்பதவியில் இருந்து காங்கிரசை நீக்க மற்ற கட்சிகளிடம் முறையிடுவோம் எனக்கூறியது.
மேலும், ' இண்டியா' கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி, திரிணமுல் காங்கிரஸ் மற்றும் உத்தவ் தாக்கரே ஆகியோர் ஆம் ஆத்மிக்கு ஆதரவு அளித்து காங்கிரசை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினர். லோக்சபா தேர்தலுக்கு மட்டுமே ' இண்டியா' கூட்டணி உருவாக்கப்பட்டு இருந்தால், அதனை கலைத்து விடலாம் என காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.
இந்நிலையில், சமாஜ்வாதியின் அகிலேஷ் யாதவ் கூறியதாவது: டில்லியில் வெற்றி பெற வேண்டும் என காங்கிரஸ், ஆம் ஆத்மி விரும்புகிறது. இக்கூட்டணி தொடர வேண்டும் என நாங்கள் எண்ணுகிறோம். டில்லியில் ஆம் ஆத்மி வலிமையாக உள்ளது. ஆனால், டில்லியில் காங்கிரஸ் vs ஆம் ஆத்மி என வந்துள்ளது. ஆம் ஆத்மிக்கு ' இண்டியா' கூட்டணி ஆதரவு அளிக்க வேண்டும் என்பது எனது கருத்து. கூட்டணி உருவாக்கப்பட்டபோதே,' எங்கு எல்லாம் மாநில கட்சிகள் வலிமையாக இருக்கிறதோ , ' இண்டியா' கூட்டணி வலிமைபெறும். டில்லியில் ஆம் ஆத்மி வலிமையாக உள்ளது. இதனால், ஆம் ஆத்மியை நாங்கள் ஆதரிக்கிறோம். பா.ஜ., வீழ்த்தப்பட வேண்டும் என்பது எங்களின் நோக்கம் என்றார்.
திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் அபிஷேக் பானர்ஜி கூறியதாவது: ' இண்டியா' கூட்டணி உருவாக்கப்பட்ட போது, மாநில கட்சிகள் எங்கு எல்லாம் வலிமையாக இருக்கிறதோ அங்கு அக்கட்சிகள் பா.ஜ.,வை எதிர்கொள்ளட்டும் என ஏற்கனவே நாம் முடிவு செய்தோம். உதாரணமாக, தமிழகத்தில் தி.மு.க.,வும், ஜார்க்கண்டில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும் வலிமையாக உள்ளதால் அவை தலைமை தாங்குகின்றன. டில்லியில் , பா.ஜ.,வை யார் வீழ்த்துவார் என நினைக்கிறீர்கள். அது ஆம் ஆத்மிதான். இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் கூறியதாவது: இண்டியா கூட்டணி கட்சிகளின் உணர்வுகளை மதிக்கிறோம். அதேநேரத்தில், கூட்டணிக்காக காங்கிரஸ் பல தியாகங்கள் செய்துள்ளது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். டில்லியில் நாங்களும் அரசியல் கட்சி என்ற முறையில் போட்டியிடுகிறோம். எங்களின் போராட்டம் தெளிவாகவும், வலிமையாகவும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.